search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிறந்த ஆசிரியர்களாய் என்றும் சீர்பெற்று விளங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் வாழ்த்து
    X

    முக ஸ்டாலின்

    சிறந்த ஆசிரியர்களாய் என்றும் சீர்பெற்று விளங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    • காலத்தால் அழிக்க முடியாத அத்தகைய கல்வி செல்வத்தை மாணவ செல்வங்களுக்கு அள்ளித் தருபவர்கள் ஆசிரியர்களே.
    • 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு பயன்படும் வகையில் “நான் முதல்வன்“ என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஆசிரியர் தினத்தையொட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    அறிவு ஒளியூட்டி அறியாமை இருள் அகற்றும் ஆசிரியப் பேரினமே, உங்கள் யாவருக்கும், என் இதயம் நிறைந்த இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள். ஒரு சிறந்த நாடு, எப்படித் திகழவேண்டும் என்பதற்கு இலக்கணம் கூற வந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர், "தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு" என்கிறார். இக்குறட்பாவிலுள்ள 'தக்கார்' என்னும் சொல்லுக்கு ஒழுக்க நெறி தவறாமல் வாழ்வோர் என்று உரையாசிரியர்கள் பொருள் காண்பர்.

    ஆனால் 'தக்கார்' என்று சுட்டப் பெறுவோர் "ஆசிரியர்'' என்று பொருள் காண நான் விழைகின்றேன். ஏனெனில், தமக்குரிய நெறியிலிருந்து வழுவாது, பிறழாது தாமும் வாழ்ந்து, வளரும் இளம் தலைமுறையினரையும் அந்நெறிப்படி வாழக் கற்றுக் கொடுக்கும் பொறுப்புமிக்கவர்களாக இருப்பவர் ஆசிரியர்களே. மனிதர்களை-மதிவாணர்களாக்குவதும், மாமேதைகளாக்குவதும் ஏன் மனிதர்களை மனிதர்களாக்குவதும் கல்விதான். காலத்தால் அழிக்க முடியாத அத்தகைய கல்வி செல்வத்தை மாணவ செல்வங்களுக்கு அள்ளித் தருபவர்கள் ஆசிரியர்களே.

    அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்கவும், பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்க்கவும், அவ்வாறு சேர்க்கப்பட்ட குழந்தைகளை இடைநிற்றல் ஏதுமின்றி முழுமையாகத் தொடரவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற கற்றல் அடைவுகளை உறுதி செய்யவும், ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சிகளை அளித்து, அவர்தம் திறன்களை வளர்க்கும் நோக்கோடு தமிழ்நாடு அரசு 2022-23-ம் ஆண்டு பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.36,895.89 கோடியை ஒதுக்கியுள்ளது.

    கொரோனா பெருந்தொற்றினால் மாணவர்களிடையே உருவான கற்றல் இழப்புகளை ஈடு செய்ய, 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அவர்தம் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே 2 லட்சம் தன்னார்வலர்களைக்கொண்டு, கடந்த ஆண்டு அக்டோபர் முதல் "இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தினை" அரசு செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்திற்கென சுமார் ரூ.163 கோடி இதுவரை செலவிடப்பட்டுள்ளது. மேலும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு பயன்படும் வகையில் "நான் முதல்வன்" என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இதுமட்டுமல்லாமல், எதிர்வரும் 2025-ம் ஆண்டுக்குள், 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து குழந்தைகளும் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண்ணறிவு திறன்களை பெறும் நோக்கோடு, 2021-22-ம் ஆண்டில் "எண்ணும் எழுத்தும் இயக்கம்" தொடங்கப்பட்டு, பல்வேறு செயல்பாடுகளுக்கென ரூ.66.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம், 18 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஆண்டுதோறும், 3 சிறந்த எழுத்தாளர்களைத் தேர்வு செய்து ரூ.25 ஆயிரம் ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழுடன் "கவிமணி விருது" வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பள்ளி மாணவர்களுக்கு தமிழ்மொழி திறனறி தேர்வு நடத்தி, ஆண்டுதோறும் 1,500 பேர் தேர்வு செய்யப்பட்டு, 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள், மாணவர்கள் என சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் பயன்பெறும் வண்ணம் மதுரையில் "முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நூலகம்" அமைய உள்ளது. நாட்டின் எதிர்கால சொத்துக்களாம் இளைய தலைமுறையை, நன் முத்துக்களாக உருவாக்கம் பெரும் பொறுப்புக்கு சொந்தக்காரர்களாகிய ஆசிரிய பேரினத்தை அரசும், நாட்டோரும், நல்லோரும் மதித்து போற்றுவதன் அடையாளமே இந்த ஆசிரியர் தின விழா கொண்டாட்டம். வகுப்பறை அனுபவங்களின் மூலம் இடையறாது பணி செய்து மென்மேலும் திறம் பெற்று சிறந்த ஆசிரியர்களாய் என்றும் சீர்பெற்று விளங்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஆசிரியர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×