search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீட் தேர்வு எழுத மாணவர்களுக்கு பயிற்சி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நீட் தேர்வு எழுத மாணவர்களுக்கு பயிற்சி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

    • அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட வேண்டும்.
    • வாரத்தின் 5 நாட்கள், பள்ளி முடிந்த பிறகு மாலை நேரத்தில் இந்தப் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும்.

    சென்னை:

    நடப்பு கல்வி ஆண்டு துவங்கி 5 மாதங்கள் முடிவடைந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் துவங்காமல் உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்புகளை உடனடியாக துவங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதற்கிடையே, நீட் பயிற்சி வகுப்புகள் விரைவில் துவங்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.

    அதன்படி , தற்போது நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட வேண்டும் என பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

    தொழிற்கல்வி இணை இயக்குனர் அனுப்பி உள்ள அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவர்களில் ஜே.இ.இ., நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு எழுத விருப்பமும் ஆர்வமும் உள்ள மாணவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும்.

    மேலும், பெரும்பாலான மாணவர்கள் நுழைவுத் தேர்வு பயிற்சியில் பங்கேற்கும் வகையில், அனைத்து மாணவர்களையும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வமூட்டி ஊக்கப்படுத்தலாம். ஆனால் கட்டாயப்படுத்துதல் கூடாது.

    மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு பயிற்சி வழங்க, அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் முதுகலை பாட ஆசிரியர்களைக் கொண்ட குழு உருவாக்கப்பட வேண்டும்.

    நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதில் தன்னார்வத்துடன் செயல்படவல்ல ஓய்வுபெற்ற ஆசிரியர்களையும் மற்றும் நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று உயர்கல்வி பயின்று வரும் மாணவர்களையும் தன்னார்வலர்களாக செயல்பட விருப்பம் இருப்பின் இக்குழுவில் இணைத்துக் கொள்ளலாம்.

    அனைத்து வேலைநாட்களிலும் பாடவாரியாக மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை பின்வருமாறு ஜே.இ.இ., நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு பள்ளியிலேயே பயிற்சி வகுப்புகள் கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி திட்டமிட்டு நடத்தப்பட வேண்டும்.

    திங்கள்-தாவரவியல், கணிதம்; செவ்வாய்-இயற்பியல்; புதன்-விலங்கியல், கணிதம்; வியாழன்-வேதியியல்; வெள்ளி-மீள்பார்வை, சிறுதேர்வு என பள்ளி அளவிலான தினசரி தேர்வுகள் வார இறுதி நாளில் பயிற்சி வகுப்புகள் மற்றும் அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சி வழங்கிட மாநிலக்குழு உதவி புரியும். மேலும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வழியேயும் மாணவர்களுக்கு தேர்விற்கான பயிற்சிகள் வழங்கப்படும். அதுசார்ந்து அவ்வப்போது வாட்ஸ்அப்பில் பகிரப்படும்.

    நீட், ஜே.இ.இ. போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பாடத் திட்டத்தின் அடிப்படையில் பள்ளிக்கல்வி இயக்ககத்தால் வழங்கப்படும் கால அட்டவணையை பின்பற்றி முறையாக பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

    பயிற்சி வழங்கப்படும் பாடத்தலைப்பினைப் பற்றிய சிறு அறிமுகம், அப்பாடப் பகுதியில் இருந்து நுழைவுத் தேர்வுகளுக்கு எதிர்நோக்கப்படும் வினாக்களைத் தீர்ப்பதற்கான சிறு குறிப்புகள், சூத்திரங்கள் மற்றும் முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கான எளிய முறைகள் ஆகியன மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்.

    இப்பயிற்சிகளைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், இயற்பியல், கணிதம், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொரு பாடத்திற்கும் இரண்டு பாட வல்லுநர்கள் (5 பாடங்களுக்கு 2 ஆசிரியர்கள் என 10 பேர்) அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும்.

    முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நிலை) இக்குழுவின் உறுப்பினர் செயலராக செயல்படுவார்.

    பள்ளிதோறும் இப்பயிற்சியில் பங்குபெறும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை மற்றும் மாவட்ட அளவில் பங்குபெறும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை தொகுத்தல் மற்றும் தேர்வு சார்ந்த ஏற்பாடுகள் ஆகியவற்றை முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த வேண்டும்.

    மாநிலக் குழுவில் இருந்து வரும் வினாத்தாள்கள், விடைக்குறிப்புகள் ஆகியவற்றை பள்ளிகளுக்கு அனுப்பி இச்செயல்பாடுகள் நடைபெறுவதை உறுதி செய்தல் வேண்டும். மாவட்ட அளவிலான இருவகையான (மாவட்டக்குழு மற்றும் பாட ஆசிரியர்கள் குழு) வாட்ஸ்அப் உருவாக்கி தகவல்களை பரிமாறிக்கொள்ளுதல் வேண்டும்.

    இதற்கு விருப்பமுள்ள மாணவ / மாணவிகளை தேர்வு செய்ய வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும்.

    பயிற்சிக்கான கால அட்டவணையை மாநிலக் குழுவின் உதவியோடு தயார் செய்வது. பயிற்சிக்குரிய வினாத்தாள்களைத் தயார் செய்ய முகாம் நடத்துதல். வினாவிற்கான விடைகளைத் தயாரித்தல்.

    பயிற்சிக்குத் தேவையான காணொளிக் காட்சிகளைத் தயாரித்தல். குழுக்களின் பணிகளை ஒருங்கிணைத்தல். மாவட்ட பணிகளை ஆய்வு செய்தல்.

    அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்பு கள் நடைபெறச் செய்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

    ஜே.இ.இ., நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு பயிற்சிக்கு கால அட்டவணை தயார் செய்தல். பயிற்சிக்குரிய வினாத்தாள்கள், விடைக் குறிப்புகள் தயார் செய்தல்.

    ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை கண்காணித்தல். மாவட்டக் குழுக்கள் விளக்குவதை கண்காணிப்பது. அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறை நாட்களில் வட்டார அளவில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதைக் கண்காணிப்பது, பாடம் ஒன்றிற்கு 4 ஆசிரியர்கள் வீதம் 20 ஆசிரியர்களை ஒன்றிணைத்துச் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×