search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மழை:  களக்காடு தலையணை செல்ல தடை
    X

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மழை: களக்காடு தலையணை செல்ல தடை

    • மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • தூத்துக்குடி மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், நேற்று காலை முதல் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி இன்று காலை 6.30 மணி வரையிலும் 323.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    அம்பை, நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட 18 மழை மானிகளில் இன்று காலை வரை எடுக்கப்பட்ட அளவீட்டின்படி அதிகபட்சமாக ராதாபுரம் பகுதியில் 36 மில்லி மீட்டரும், கன்னடியன் கால்வாய் மற்றும் களக்காடு பகுதிகளில் 33 மில்லி மீட்டரும், பாபநாசம் பகுதியில் 31 மில்லி மீட்டர் மழையும், அம்பாசமுத்திரம் பகுதியில் 30 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

    அணைகளை பொறுத்தவரை 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 125.20 அடியை எட்டியுள்ளது. அந்த அணைக்கு நேற்று 530 கனஅடி நீர் வந்த நிலையில் இன்று 861 கனஅடியாக உயர்ந்துள்ளது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 136.05 அடியாக உயர்ந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் நீர் நிலைகளில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மழை கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தாலுகா வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    மாநகரில் அதிகாலை முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நெல்லை டவுன், சந்திப்பு பஸ் நிலையம், ஈரடுக்கு மேம்பாலம் கீழ் பகுதி, பழையபேட்டை, வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, புறவழிச்சாலைகள், தச்சநல்லூர், சமாதானபுரம், கே.டி.சி.நகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது.


    இன்று அதிகாலை முதல் களக்காடு, மாவடி, திருக்குறுங்குடி, பத்மநேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையிலும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் களக்காட்டில் ஓடும் நாங்குநேரியான் கால்வாய், உப்பாறு, பச்சையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. களக்காடு தலையணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு தடுப்பணையை மூழ்கடித்தவாறு வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

    இதையொட்டி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். திருக்குறுங்குடி வனப்பகுதியில் உள்ள நம்பியாற்றிலும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனை தொடர்ந்து திருமலைநம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் மழையால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர். ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு அதிகபட்சமாக 48 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மணியாச்சி, வேடநத்தம், கீழஅரசடி ஆகிய இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.

    கயத்தாறு, கடம்பூர், எட்டயபுரம், விளாத்திகுளம், வைப்பாறு, சூரன்குடி, காடல்குடி ஆகிய இடங்களில் நேற்று தொடங்கி இன்று காலை வரை விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவில்பட்டி, சாத்தான்குளம் பகுதிகளிலும் மழை பெய்த வண்ணனம் இருக்கிறது.

    தூத்துக்குடி மாநகர பகுதியில் 10 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அங்கு தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. ஒரு சில தெருக்களில் தேங்கி கிடக்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். ஸ்ரீவைகுண்டத்தில் 10 மில்லி மீட்டரும், காயல்பட்டினத்தில் 25 மில்லி மீட்டரும், சாத்தான்குளத்தில் 17 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்திலும் இன்று அதிகாலை 4 மணி முதல் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கடந்த 2 நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வரும் நிலையில் இன்று அதிகாலை முதல் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வானம் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் காலை 7 மணி வரையிலும் வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்லும் போது வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

    பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், சிவகிரி, தென்காசி, ஆய்குடி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ரம்மியமான சூழல் நிலவுவதோடு, இதமான காற்றும் வீசி வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    Next Story
    ×