search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கம்பீர தோற்றத்துடன் விஜயகாந்த் மீண்டும் கர்ஜிப்பாரா?- கணீர் குரலை கேட்க தொண்டர்கள் காத்திருப்பு
    X

    கம்பீர தோற்றத்துடன் விஜயகாந்த் மீண்டும் கர்ஜிப்பாரா?- கணீர் குரலை கேட்க தொண்டர்கள் காத்திருப்பு

    • தொண்டர்கள் கூட்டத்தை நாலா புறமும் பார்த்து விஜயகாந்த் கையெடுத்து கும்பிட்டார்.
    • இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி பெருவிரலை உயர்த்தி காட்டி காட்டினார் விஜயகாந்த்.

    சென்னை:

    விஜயகாந்த் உடல்நிலை கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு இருந்ததால் அவரால் தீவிர அரசியலில் செயல்பட முடியவில்லை.

    நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களாலும் தொண்டைக் குழாய் தொடர்பான நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அதற்கான சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

    அவரால் கம்பீரமாக எழுந்து நிற்க முடியவில்லை. தனது கணீர் குரலை மீண்டும் ஒலிக்க முடியவில்லை. இப்படி விஜயகாந்தின் உடல் நிலையை பார்த்து தே.மு.தி.க. தொண்டர்கள் மட்டுமின்றி அவரது நண்பர்களும் திரையுலக பிரபலங்களும் பலமுறை கண்ணீருடன் கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

    விஜயகாந்தின் உடல் நிலையை சீராக்கி அவரை பழைய விஜயகாந்த் ஆக்கி விட வேண்டும் என்பதில் அவரது மனைவி பிரேமலதாவும் குடும்பத்தினரும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இதற்காக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தே.மு.தி.க.வில் நடைபெறும் அனைத்து கூட்டங்களிலும் பிரேமலதாவே பங்கேற்று வரும் நிலையில் கட்சி அலுவலகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க விஜயகாந்தை அழைத்து வருகிறார்கள். உடல்நிலை குன்றிய நிலையில் விஜயகாந்தை இப்படி கட்சி அலுவலகத்திற்கு அழைத்து வருவது சரிதானா? என்கிற விமர்சனங்கள் எழுந்தன.

    இது பற்றி கருத்து தெரிவித்த பிரேமலதா, "விஜயகாந்த் நலமுடன் தான் இருக்கிறார். அவருக்கு ஏற்பட்டிருப்பது தற்காலிக உடல் சோர்வு தான்" என்று கூறியிருந்தார்.

    நேற்று முன்தினம் தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெற்ற விஜயகாந்தின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பிரேமலதா இதனை குறிப்பிட்டு சற்று வருத்தத்துடனே பேசினார். கேப்டன் நன்றாகத் தான் இருக்கிறார். அவரைப் பற்றி தேவையில்லாமல் வதந்தி பரப்பி வருகிறார்கள்.

    தனது 70-வது பிறந்தநாளில் தொண்டர்கள் விஜயகாந்தை சந்திக்கலாம் என்று கூறியிருந்தார். இதன்படி நேற்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடிய விஜயகாந்தை பார்க்க கட்சி அலுவலகத்தில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு இருந்தனர்.

    அவர்கள் பல மணி நேரம் விஜயகாந்தை பார்ப்பதற்காக காத்துக் கிடந்தனர். காலையில் இருந்து கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் திரண்ட நிலையில் விஜயகாந்த் மதியம் 12 மணியளவில் அலுவலகம் வந்தார். அவரை பார்த்ததும் கேப்டன் வாழ்க என்று தொண்டர்களும் நிர்வாகிகளும் கோஷங்களை எழுப்பினார்கள். தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த் சேரில் அமர்ந்து இருந்த படியே கட்சியினரை பார்த்து உற்சாகமாக கையசைத்தார்.

    தொண்டர்கள் கூட்டத்தை நாலா புறமும் பார்த்து கையெடுத்து கும்பிட்டார். இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி பெருவிரலை உயர்த்தி காட்டி காட்டினார். இதற்கு முன்பு தே.மு.தி.க. அலுவலகத்திற்கு வந்த போதெல்லாம் விஜயகாந்தை அதிக சோர்வுடனே கட்சியினர் பார்த்திருக்கிறார்கள்.

    ஆனால் நேற்றைய நிகழ்ச்சியின்போது விஜயகாந்தை பார்த்து தே.மு.தி.க. தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தோடு காணப்பட்டனர். தலைவர் நல்லா தான் இருக்காரு.... எல்லாம் சரியாகிவிடும் என்று தொண்டர்கள் கூறியதையும் கேட்க முடிந்தது.

    இப்படி விஜயகாந்த் படிப்படியாக குணமடைந்து மீண்டும் பழைய நிலைக்கு நிச்சயம் திரும்புவார் என்கிற நம்பிக்கை கட்சியினர் மத்தியில் தற்போது சற்று ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகளும் இதனை தெரிவித்தனர்.

    விஜயகாந்தின் உடல் நிலை தொடர்பாக அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, "விஜயகாந்துக்கு தினமும் பிசியோதெரபி சிகிச்சை வீட்டிலேயே அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அவரது கை, கால்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதன் காரணமாகவே நேற்றைய நிகழ்ச்சியின் போது அவர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார்.

    இந்த சிகிச்சையை தொடர்ந்து மேற்கொண்டு அவரை பழைய நிலைக்கு கொண்டு வருவோம் என்கிற நம்பிக்கை அனைவருக்குமே ஏற்பட்டுள்ளது. இதேபோன்று குரல் பயிற்சியும் விஜயகாந்துக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அவரால் தற்போது நிற்க முடியவில்லை. பேசுவதற்கும் முடியாமல் இருக்கிறார்.

    இதற்கும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். வருகிற பாராளுமன்ற தேர்தலுக்குள் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக சீராகி விடும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×