search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விஜயகாந்த் உடலை ராஜாஜி அரங்கத்தில் வைக்க வேண்டும்  - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை
    X

    விஜயகாந்த் உடலை ராஜாஜி அரங்கத்தில் வைக்க வேண்டும் - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை

    • தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கிறது.
    • பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி.

    தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பொது மக்கள், ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    உயிரிழந்த விஜயகாந்த் உடல் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கிறது. இவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வரை பலத்தரப்பட்டோரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை, விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

    பிறகு செய்தியாளர்களிடையே பேசிய அவர், "ஒரு மனிதர் அவர் இருந்த அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்து, நம்மை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். சினிமா துறையில் யாரெல்லாம் முடியாது என சொன்னார்களோ, மாநிறம் கொண்டவர்களுக்கு இடமில்லை என்பதை உடைத்துக் காட்டி சினிமா துறையில் முத்திரை பதித்து தென்னிந்திய சினிமாவில் முக்கிய புள்ளியாக இருந்து, தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என அனைத்து துறைகளிலும் கோலோச்சி, அரசியலில் இரு பெரும் துருவங்கள் இருந்த போது மூன்றாவது ஒரு நபருக்கு இடம் இருக்கிறது என்பதை நமக்கு காட்டி ஏழைகளின் குரலாக இருந்த விஜயகாந்த் இன்று நம்மோடு இல்லை."

    "பா.ஜ.க. சார்பில் அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியை முகநூல் மூலம் பதிவு செய்திருக்கிறார். உள்துறை மந்திரி அமித் ஷா, தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மூத்த அமைச்சர்கள் அனைவரும் 2014 தேர்தலில் கேப்டன் விஜயகாந்த் உடன் எவ்வளவு நெருக்கமாக இருந்தோம் என்பதை நினைவு கூர்ந்திருக்கிறார்கள்."

    "தமிழ்நாடு அரசுக்கு பா.ஜ.க. இரு கரம் கூப்பி வேண்டுகோள் விடுக்கிறது. இந்த அலுவலகத்தில் இருக்கும் முக்கிய புள்ளிக்கு அரசும், நாமும் செலுத்த வேண்டிய மரியாதையில் கடமை தவறி இருக்கிறது. அலுவலகத்திலும், வெளியிலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் காத்திருக்கின்றனர். கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த கஷ்டப்படுகின்றார்கள். தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்."

    "பொது மக்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக தமிழக அரசு கேப்டன் விஜயகாந்த் உடலை ராஜாஜி அரங்கத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறோம். நாளை பெரிய அளவில் கூட்டம் வரலாம். இதனால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் பெரிய தவறாகி விடும். முதலமைச்சர் அவர்கள் இந்த கோரிக்கையை உடனடியாக பரிசீலனை செய்து ராஜாஜி அரங்கத்தில் விஜயகாந்த் உடலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்."

    "விஜயகாந்த் அவர்கள் நடிகர், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் என்பதை தாண்டி பொது மக்கள் மனங்களில் இடம்பிடித்துள்ள தலைவர். அவருக்கு அரசு மரியாதையோடு மணி மண்டம் கட்டப்பட வேண்டும். இதற்கு அரசு உடனடியாக பொதுமக்கள் வந்து பார்த்து செல்லும் வகையில் நிலத்தை ஒதுக்கீடு செய்து, அதில் மணி மண்டபம் கட்டுவதற்கு முன்வர வேண்டும் என்பது பா.ஜ.க.-வின் கோரிக்கை," என்று தெரிவித்தார்.

    Next Story
    ×