என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வேலூரில் ஏ.டி.எம்.மில் முகமூடி கும்பல் கொள்ளை முயற்சி
    X

    வேலூரில் ஏ.டி.எம்.மில் முகமூடி கும்பல் கொள்ளை முயற்சி

    • ஏடிஎம் மையத்தில் இருந்த அலாரம் ஒலிக்க தொடங்கியது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி, பகுதி-2, 19-வது தெருவில் சப்தகிரி என்ற வணிக வளாகம் உள்ளது.

    இந்த வணிக வளாகத்தில் பேங்க் ஆப் மகாராஷ்டிரா என்ற தனியார் வங்கி இயங்கி வருகிறது. வங்கியின் முன் பகுதியில் ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இன்று அதிகாலை 3.10 மணிக்கு 2 மர்ம நபர்கள் முகமூடி அணிந்து ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்தனர்.

    அவர்கள் கையில் வைத்து இருந்த இரும்பு ராடால் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவை உடைத்தனர்.

    பின்னர் அவர்கள் கொண்டு வந்த கத்தி மூலம் அலாரம் ஒயரை துண்டித்தனர். அப்போது ஏடிஎம் மையத்தில் இருந்த அலாரம் ஒலிக்க தொடங்கியது.

    இதனைக் கேட்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.இதே போல் வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு தகவல் சென்றது.

    தலைமை அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் இது குறித்து சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.

    பின்னர் போலீசார் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    மர்ம நபர்கள் 2 பேர் முகமூடி அணிந்து ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க வந்தது தெரிய வந்தது.

    மேலும் கைரேகை நிபுணர்கள் ஏ.டி.எம். மையத்தில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் வடமாநில நபர்கள் ஈடுபட்டார்கள் அல்லது உள்ளூரை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த அலாரம் ஒலித்ததால் ஏ.டி.எம். எந்திரத்தில் வைக்கப்பட்டு இருந்த லட்சக்கணக்கான ரூபாய் பணம் கொள்ளை போகாமல் தப்பியுள்ளது. இந்த சம்பவம் சத்துவாச்சாரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×