search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை-நெல்லை வந்தே பாரத் சபரிமலை சிறப்பு ரெயில்: வியாழக்கிழமை தோறும் இயக்கப்படும்
    X

    சென்னை-நெல்லை "வந்தே பாரத்" சபரிமலை சிறப்பு ரெயில்: வியாழக்கிழமை தோறும் இயக்கப்படும்

    • வந்தே பாரத் சிறப்பு ரெயில் வருகிற 16, 23, 30 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லும்.
    • திருநெல்வேலியில் இருந்து அதே நாளில் புறப்பட்டு எழும்பூர் வந்து சேரும்.

    சென்னை:

    சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலுக்கு பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. செப்டம்பர் மாதம் 24-ந்தேதி தொடங்கப்பட்டது முதல் இதுவரையில் பயணிகள் முழு அளவில் பயணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை குறைப்பதற்காக வந்தே பாரத் சிறப்பு ரெயில் சென்னையில் இருந்து 5 நாட்கள் இயக்கப்பட்டன.

    சிறப்பு ரெயில்களில் அனைத்து வகுப்புகளும் நிரம்பின. பயணிகள் ஆர்வத்துடன் பயணித்து வரும் நிலையில் தற்போது சபரிமலை சிறப்பு ரெயிலாகவும் வந்தே பாரத் இயக்கப்பட உள்ளது.

    சபரிமலை பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்ல வசதியாக வந்தே பாரத் சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    சபரிமலைக்கு பக்தர்கள் இருமுடி கட்டி செல்வது வழக்கம். திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டை வழியாக செல்லும் வகையில் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த சிறப்பு ரெயில் வியாழக்கிழமை தோறும் எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு பகல் 2.15 மணிக்கு சென்றடையும். பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.

    வந்தே பாரத் சிறப்பு ரெயில் வருகிற 16, 23, 30 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லும். திருநெல்வேலியில் இருந்து அதே நாளில் புறப்பட்டு எழும்பூர் வந்து சேரும்.

    இந்த ரெயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளதாக தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி குகநேசன் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×