search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வைகை அணை நீர்மட்டம் மீண்டும் உயர்வு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
    X

    கனமழை காரணமாக வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான மூல வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    வைகை அணை நீர்மட்டம் மீண்டும் உயர்வு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.50 அடியாக உள்ளது. அணைக்கு 1222 கன அடி நீர் வருகிறது.
    • கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் திண்டுக்கல், தேனி மாவட்ட மஞ்சளாற்று கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் தொடர்ந்து பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    குறிப்பாக கொட்டக்குடி, குரங்கணி பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்றும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதனால் வைகை அணையின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. நேற்று 62.73 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 63.62 அடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் நீர்வரத்து 1327 கன அடியில் இருந்து 3795 கன அடியாக உயர்ந்துள்ளது.

    நேற்று வரை பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 669 கன அடியாக குறைக்கப்பட்டது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.50 அடியாக உள்ளது. அணைக்கு 1222 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேலும் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான வெள்ளிமலை, அரசரடி, வருசநாடு, கண்டமனூர் பகுதியில் பெய்த கனமழையால் மூல வைகையாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆற்றை கடக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.60 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 293 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 552 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் திண்டுக்கல், தேனி மாவட்ட மஞ்சளாற்று கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என அறிவுறுத்தி உள்ளனர். சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.80 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 220.58 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் 37-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வருசநாடு அருகே உள்ள மேகமலை அருவி, கம்பம் அருகே உள்ள சுருளி அருவி, போடி அருகே உள்ள அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சி உள்பட அனைத்து அருவிகளுக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை வித்துள்ளனர்.

    மேலும் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    பெரியாறு 7, தேக்கடி 6.8, கூடலூர் 1.2, உத்தமபாளையம் 1, சண்முகாநதி அணை 1.4, போடி 50, வைகை அைண 63.2, மஞ்சளாறு 92, சோத்துப்பாறை 36, பெரியகுளம் 40.4, வீரபாண்டி 3.6, அரண்மனைபுதூர் 84, ஆண்டிபட்டி 60.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×