என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜூன் 29-ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்
- முதல் நாளான 20-ந்தேதி அன்று மட்டும் காலை 10 மணிக்கு சட்டசபை தொடங்கும்.
- தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டம் வழக்கமாக காலை 10 மணிக்கு தொடங்கும். ஆனால் இனிமேல் காலை 9.30 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற விதிகள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டசபை கூட்டத்தொடரை வருகிற 20-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதுபற்றி சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-
20-ந்தேதி சட்டசபை கூடும்போது மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகளும், எம்.எல்.ஏ.வாக இருந்து மறைந்த புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானமும் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டு அன்றைய தினம் சபை ஒத்தி வைக்கப்படும்.
அதன்பிறகு 21-ந்தேதி காலையில் சட்டசபை கூடும்போது, சட்டசபையை காலை 9.30 மணிக்கு நடத்துவதற்கான தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்படும்.
22-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரை தினமும் சட்டசபை காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மதியம் 1.30 மணிக்கு முடிக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு சபை தொடங்கப்பட்டு இரவு 8 மணி வரை நடத்தப்படும்.
29-ந்தேதி காலை மட்டும் சட்டசபை நடைபெறும். மாலையில் இருக்காது. மொத்தம் 16 அமர்வுகள் கூடி மானிய கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடத்தப்படும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட காரணத்தால்தான் சட்டசபை காலை-மாலையில் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டசபையில் 21-ந்தேதி காலை நீர்வளத்துறை, இயற்கை வளங்கள், தொழிலாளர் நலன் மானிய கோரிக்கைகளும், மாலையில் வீட்டு வசதி, மதுவிலக்கு, சுற்றுச்சூழல், மாற்று திறனாளிகள், சமூக நலத்துறை மானிய கோரிக்கைகள் எடுத்துக் கொள்ளப்படும்.
22-ந் தேதி காலையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறையும், மாலையில் வேளாண்மை, கால்நடை, மீன்வளம், பால் வளத்துறை எடுத்துக் கொள்ளப்படும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும்.
24-ந் தேதி காலை உயர் கல்வித் துறை, வருவாய்த் துறை, பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கைகளும், மாலையில் நீதி, நிர்வாகம், சிறைத்துறை, சட்டத்துறை, செய்தித்துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானிய கோரிக்கைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
25-ந்தேதி நெடுஞ்சாலைத் துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், வனத்துறையும், மாலையில் பிற்படுத்தப்பட்டோர், கதர் கிராமத் தொழில், கைத்தறி, கதர் துறையும், போக்குவரத்துத் துறை, ஆதிதிராவிடர் நலத்துறையும் எடுத்துக் கொள்ளப்படும்.
26-ந் தேதி காலை திட்டம், வளர்ச்சி, பொதுத்துறை, மாநில சட்டமன்றம், எரிசக்தித் துறை, நிதித்துறை உள்ளிட்ட மானிய கோரிக்கைகளும், மாலையில் சுற்றுலா, வணிக வரி, பதிவுத்துறை, இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கைகளும் எடுத்துக் கொள்ளப்படும்.
27-ந் தேதி காலை இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை, கைத்தறி துணி நூல் துறையும், மாலையில் கூட்டுறவு, உணவுத் துறையும் எடுத்துக் கொள்ளப்படும்.
28-ந் தேதி காலை குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, தகவல் தொழில்நுட்பம், தொழில் துறையும், மாலையில் காவல், தீயணைப்புத் துறை மானிய கோரிக்கைகள் எடுத்துக் கொள்ளப்படும்.
கடைசி நாளான 29-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசுவார்.






