என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் தான் காப்பாற்ற வேண்டும்- பணியிடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி வீடியோ வெளியிட்ட நெல்லை போலீஸ்காரர்
- மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தன்னை தள்ளுவதாக போலீஸ்காரர் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
- தன்னை மீண்டும் சொந்த மாவட்டத்திலேயே பணியமர்த்தி தன்னை காப்பாற்ற வேண்டும் என அவர் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் செல்லதுரை. இவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ விடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் உள்ள காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்லத்துரை மாற்றப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் மற்றும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் ஆகியோரிடம் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவ விடுப்பில் இருக்கும் தன்னை எந்த காரணமும் இன்றி சொந்த மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டத்திற்கு மாற்றியது குறித்து காவலர் செல்லத்துரை காரணம் கேட்டுள்ளார்.
ஆனால் முறையான பதில் அவர்களிடம் இருந்து கிடைக்கவில்லை என்று கூறி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் உயர் அதிகாரிகளிடம் இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும், இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தன்னை தள்ளுவதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
தன்னை மீண்டும் சொந்த மாவட்டத்திலேயே பணியமர்த்தி தன்னை காப்பாற்ற வேண்டும் என அவர் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.






