search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாடு-புதுவையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்கியது: 9.76 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்
    X

    தமிழ்நாடு-புதுவையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்கியது: 9.76 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்

    • தேர்வு மையங்களுக்குள் மின் சாதன பொருட்கள், செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.
    • காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.

    பள்ளியில் படித்த மாணவர்கள், தனித் தேர்வர்கள் என 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 பேர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வு எழுதினார்கள்.

    5 லட்சத்து ஆயிரத்து 28 மாணவர்களும், 4 லட்சத்து 75 ஆயிரத்து 56 மாணவிகளும், 5 மூன்றாம் பாலினத்தவர்களும் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். சிறைச்சாலைகளில் உள்ள 264 கைதிகளும், மாற்றுத்திறனாளிகள் 13,151 பேரும் இத்தேர்வை எழுத சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    12,639 பள்ளிகள், 4025 மையங்கள் மற்றும் 182 தனித்தேர்வர்களுக்கான மையங்களில் தேர்வு நடக்கிறது. சென்னை புழல் உள்ளிட்ட 9 ஜெயில்களிலும் கைதிகள் தேர்வு எழுதினர்.

    காலை 10 மணி முதல் பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. 10 மணி முதல் 10.10 மணி வரை வினாத்தாளை படிப்பதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது. 10.10 மணி முதல் 10.15 மணி வரை விவரங்களை சரி செய்ய நேரம் ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 3 மணி நேரம் தேர்வு நடந்து முடிந்தது.

    முதல் நாளான இன்று தமிழ் தேர்வு நடந்தது. இதனையடுத்து 3 நாட்கள் அரசு விடுமுறையாகும். மீண்டும் 10-ந் தேதி ஆங்கில தேர்வு நடக்கிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் 2 அல்லது 3 நாட்கள் இடைவெளி விட்டு தேர்வு நடத்தப்படுகிறது. 20-ந்தேதி தேர்வு முடிகிறது.

    தேர்வு மையங்களுக்குள் மின் சாதன பொருட்கள், செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    மாணவர்களை பரிசோதித்த பிறகே தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    வினாத்தாள் குறிப்பிட்ட நேரத்திற்குள் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லவும், தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்கள் காப்பு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

    11, 12-ம் வகுப்பு தேர்வு எவ்வித குழப்பமும் இன்றி நடந்து முடிந்தது போல எஸ்.எஸ்.எல்.சி. தேர்வையும் நடத்தி முடிக்க கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 அயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆனார்கள். தமிழ் உள்ளிட்ட முக்கிய பாட தேர்வுகளை அவர்கள் எழுதவில்லை.

    அதுபோன்ற நிலை 10-ம் வகுப்பு தேர்வில் நடக்கக்கூடாது என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இடைநின்ற மாணவர்களை தேர்வுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இன்று நடந்த தமிழ் தேர்வை எத்தனை பேர் எழுதவில்லை என்ற புள்ளி விவரத்தை தேர்வுத்துறை வெளியிடுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    Next Story
    ×