என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கீழ்பவானி நீர்வழித்தடத்தில் கான்கிரீட் தளம்: நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம்- சீமான் அறிவிப்பு
- கான்கிரீட் தளம் அமைப்பது ஒப்பந்ததாரர்களுக்கு உதவுமே தவிர, விவசாயிகளுக்குச் சிறிதளவும் உதவாது என்றுகூறி கீழ்பவானி ஆற்றுப் பாசன கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மீண்டும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
- அனைத்து கிராமசபைக் கூட்டங்களிலும் கான்கிரீட் தளத்திற்கு எதிராகத் தீர்மானங்களையும் நிறைவேற்றி உள்ளனர்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடைமடைப் பகுதிகளுக்குப் பாசன நீரினைக் கொண்டு சேர்ப்பதாகக் கூறி காவிரி ஆற்றின் கல்லணைக் கால்வாய், பவானிசாகர் அணையின் கீழ்பவானி வாய்க்கால் உள்ளிட்ட ஆறுகளிலிருந்து பாசன வசதி தரும் நீர்வழித் தடங்களை கான்கிரீட் தடங்களாக மாற்றும் தமிழ்நாடு அரசின் செயல் சூழலியல் அறிவியலுக்குப் புறம்பானதாகும். நீர்வழித் தடங்களை கான்கிரீட் தளங்களாக மாற்றுவதினால் இடைப்பட்ட பாசன கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் முற்றுமுழுதாக அற்றுப்போய் குடிநீர் பஞ்சம் ஏற்படுவதோடு நிலத்தடிநீர் பாசனமும் வற்றிப்போகும் பேராபத்து ஏற்படும்.
ஏற்கனவே, பரம்பிக்குளம் ஆழியாறு வாய்க்காலில் கசிவுநீர் மூலம் இழப்பு ஏற்படுவதாகக் கூறி, நீர்வழித்தடம் கான்கிரீட் தளமாக மாற்றப்பட்டதினால் பாசனநீர் வேகமாக வெளியேறி, பெருமளவு நீர் இழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கடைமடைக்குக் கிடைத்து வந்த நீரும் அதன் பின் கிடைக்கப்பெறாமல் போய்விட்டது. அதனை உணர்ந்தே, கடந்த 2013-ம் ஆண்டு கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். அதனையடுத்து, அன்றைய முதல்வர் ஜெயலலிதா கீழ்பவானி கான்கிரீட் திட்டத்தைக் கைவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், தி.மு.க. அரசு அதனை மீண்டும் நிறைவேற்ற முயன்றபோது, கான்கிரீட் தளம் அமைப்பது ஒப்பந்ததாரர்களுக்கு உதவுமே தவிர, விவசாயிகளுக்குச் சிறிதளவும் உதவாது என்றுகூறி கீழ்பவானி ஆற்றுப் பாசன கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மீண்டும் போராட்டங்களை முன்னெடுத்தனர். மேலும், அனைத்து கிராமசபைக் கூட்டங்களிலும் கான்கிரீட் தளத்திற்கு எதிராகத் தீர்மானங்களையும் நிறைவேற்றி உள்ளனர்.
அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழலை நாசமாக்கும் இக்கொடும் திட்டத்தை எதிர்த்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் முன்னெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஆதரவாகத் துணைநின்றது. அதன் பிறகு இத்திட்டத்தை தற்காலிமாக கிடப்பில் போட்டிருந்த தி.மு.க. அரசு, தற்போது மீண்டும் அதனைச் செயல்படுத்த தீவிரம் காட்டிவருவது விவசாயிகளுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
கடைமடைகளுக்கு நீர் சென்று சேர்ப்பதில் தி.மு.க. அரசிற்கு உண்மையான அக்கறை இருக்குமாயின், பல ஆண்டுகளாகத் தூர்வாராமல் உள்ள வாய்க்கால்களையும், கால் வாய்களையும், ஓடைகளையும் முறையாகத் தூர்வாருவதும், கரைகளை வலுவாகப் பலப்படுத்துவதுமே சரியான நடவடிக்கையாக இருக்கும். அதனை விடுத்து, விவசாயிகளின் எதிர்ப்பினையும் மீறி மீண்டும் கான்கிரீட் தளம் அமைக்க தி.மு.க. அரசு முயன்றால், இக்கொடுந்திட்டத்தை முழுமையாகத் திரும்பப் பெறும்வரை நாம் தமிழர் கட்சி தொடர்ப் போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






