search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    4 வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் வர்றீங்க... திருநாவுக்கரசர் எம்.பி.யை முற்றுகையிட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்
    X

    4 வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் வர்றீங்க... திருநாவுக்கரசர் எம்.பி.யை முற்றுகையிட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்

    • அடுத்து தேர்தலை எதிர்பார்த்து வர்றீங்களா? என சரமாரி கேள்வி எழுப்பினர்.
    • பீமநகர்-ஆழ்வார்தோப்பு பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் சென்று வருகிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதிக்கு காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் நேற்று மக்கள் குறைகேட்க வந்தார். அப்போது, அப்பகுதி எஸ்டிபிஐ கட்சியின் கிளைத் தலைவர் அப்துல் ரகுமான் தலைமையில் அக்கட்சியினர் திருநாவுக்கரசரை முற்றுகையிட்டு, ''4 வருஷத்துக்கு அப்புறம் இப்பத்தான் இங்கு வர்றீங்க. நன்றி சொல்லக்கூட வரல. அடுத்து தேர்தலை எதிர்பார்த்து வர்றீங்களா? என சரமாரி கேள்வி எழுப்பினர்.

    மேலும் பீமநகர்-ஆழ்வார்தோப்பு பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் சென்று வருகிறார்கள். மிகவும் சேதமடைந்த இந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டும். இந்தப் பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் காஸ் சிலிண்டர் குடோனை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பலமுறை மனு அளித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. உங்களையும் பார்க்க முடியவில்லை'' என சரமாரியாக குற்றம்சாட்டினர்.

    அதற்கு பதிலளித்த திருநாவுக்கரசர், ''இந்தப் பாலத்தை கட்டுவதற்கு குறைந்தது ரூ.50லட்சம் ஆகும். இதை நான் செய்ய முடியாது. இங்கு அமைச்சருங்க இருக்காங்க, எம்எல்ஏ இருக்காங்க. அவங்களப் போய் பாருங்கள். என்னோட ஆபீஸ்ல 24 மணி நேரமும் ஆட்கள் இருங்காங்க. அவங்ககிட்ட மனு கொடுங்க. நான் 4 நாட்களாக இங்கேதான் இருக்கிறேன். எதுவாக இருந்தாலும் மனுவாக எழுதிக் கொடுங்கள். உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிக்கிறேன்'' என்றார்.

    இதனால் அதிருப்தியடைந்த அவர்கள் திருநாவுக்கரசருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தரையில் அமர்ந்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் ஒரு வழியாக மனு அளித்து விட்டு போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

    இதையடுத்து அங்கிருந்து திருநாவுக்கரசர் புறப்பட்டுச் சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×