search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரை கிழக்கு மண்டல அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
    X

    மதுரை கிழக்கு மண்டல அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

    • மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு பகுதியில் தூய்மை பணியில் 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
    • குப்பைகளை சேகரிக்கும் பேட்டரி வாகன ஓட்டுநர்களும் கலந்து கொண்டனர்.

    மதுரை:

    மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு பகுதியில் தூய்மை பணியில் 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு வேலை பார்த்து வருகின்றனர்.

    இதனிடையே துப்புரவு பணியாளர்களுக்கு தனியார் நிறுவனம் நிர்ணயிக்கப்பட்ட மாத சம்பளம் ரூ.15 ஆயிரத்துக்கு பதிலாக ரூ. 10 ஆயிரத்து 500 மட்டுமே வழங்குவதாக கூறப்படுகிறது. மேலும் சம்பளத்தை வழங்க கால தாமதம் செய்கின்றனர் எனவும், மே மாதம் சம்பளம் தற்போது வரை வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக துப்புரவு பணியாளர்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரியிடம் புகார் அளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதை கண்டித்தும், ஊதிய பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தியும் இன்று காலை பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணிகளை புறக்கணித்து மதுரை மாநகராட்சியின் கிழக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் குப்பைகளை சேகரிக்கும் பேட்டரி வாகன ஓட்டுநர்களும் கலந்து கொண்டனர்.

    தகவல் அறிந்த மதுரை கிழக்கு மண்டல உதவி ஆணையர் காளிமுத்தண்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது ஊதிய பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்ற துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினார். துப்புரவு ஊழியர்களின் இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், வார்டு முழுவதும் குப்பைகளை அகற்றி துப்புரவு பணிகளில் ஈடுபடும் எங்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை.

    5-ந்தேதிக்கு பதிலாக கால தாமதம் செய்து சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் குடும்பம் நடத்தவே கஷ்டமாகவே உள்ளது. மேலும் பணியில் சேரும் போது கூறிய சம்பளத்திற்கு பதிலாக குறைவாக வழங்குகிறார்கள். எனவே இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×