search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சைதாப்பேட்டையில் 7 பவுன் செயின் பறிப்பு கொள்ளையன் தள்ளி விட்டதில் கீழே விழுந்த பெண் மயிரிழையில் உயிர் தப்பினார்
    X

    சைதாப்பேட்டையில் 7 பவுன் செயின் பறிப்பு கொள்ளையன் தள்ளி விட்டதில் கீழே விழுந்த பெண் மயிரிழையில் உயிர் தப்பினார்

    • கொள்ளையன் கீழே தள்ளி விட்டதில் சாலையின் நடுவே பூங்கொடி கீழே விழுந்தார்.
    • வாலிபர் பழைய குற்றவாளியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் பூங்கொடி. இவர் அப்பகுதியில் உள்ள சவுந்தரீஸ்வரர் கோவிலுக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு நடந்து சென்றார்.

    சைதாப்பேட்டை கூத்தாடும் பிள்ளையார் கோவில் தெரு வழியாக பூங்கொடி நடந்து சென்றபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென பூங்கொடியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை பறித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பூங்கொடி கூச்சல் போட்டார். அதே நேரத்தில் செயினை பறித்த வாலிபர் பூங்கொடியை முன்னால் இழுத்து கீழே தள்ளிவிட்டு விட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பினார். பூங்கொடியின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்த வீட்டில் உள்ள ஒருவர் வெளியில் ஓடி வந்தார். அவரும் செயின் பறிப்பு கொள்ளையனை பிடிக்க விரட்டினார். ஆனால் அதற்கு பலன் கிடைக்க வில்லை. கொள்ளையன் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி மாயமானான்.

    கொள்ளையன் கீழே தள்ளி விட்டதில் சாலையின் நடுவே பூங்கொடி கீழே விழுந்தார். அப்போது எதிர்திசையில் ஆட்டோ ஒன்று வேகமாக வந்தது. ஆட்டோ டிரைவர் திடீர் பிரேக் போட்டு ஆட்டோவை நிறுத்தினார். இதில் கீழே விழுந்து கிடந்த பூங்கொடியின் அருகில் மோதுவது போல் போய் ஆட்டோ நின்றது. அதிர்ஷ்டவசமாக ஆட்டோ மோத வில்லை.

    டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ ஓடி இருந்தால் பூங்கொடியின் மீது ஆட்டோ மோதி இருக்கும். இதில் உயிர் சேதமும் ஏற்பட்டிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    செயின் பறிப்பு சம்பவம் நடந்த கூத்தாடும் பிள்ளையார் கோவில் தெரு சிறிய சந்து போன்றதாகும். அங்கு பொறுத்தப்பட்டிருந்த கேமராவில் பதைபதைக்க வைக்கும் வகையிலான காட்சிகள் பதிவாகி உள்ளன.

    ஒரு கார் மட்டுமே செல்லும் அளவுக்கு காணப்படும் சாலையில் ஓரமாக வேன் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் 5 வாலிபர்கள் தொடர்ச்சியாக செல்கிறார்கள். இதில் 5- வதாக வந்த வாலிபர்தான் பூங்கொடியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு கைவரிசை காட்டியுள்ளார். அந்த வாலிபர் பழைய குற்றவாளியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். அதில் குற்றவாளியை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதன்படி போலீசார் தனிப்படைகள் அமைத்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

    கொள்ளை சம்பவத்தில் ஒரே ஒரு வாலிபருக்கு மட்டும் தொடர்பு உள்ளதா? இல்லை அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்களும் செயின் பறிப்பு கொள்ளையர்கள்தானா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது செயின் பறிப்பு கொள்ளையர்களை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சைதாப்பேட்டையில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பிடிக்கவும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். இது போன்ற குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று எச்சரிக்கை விடுத்தார்.

    சென்னையில் இதற்கு முன்பும் இது போன்ற செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சைதாப்பேட்டையில் மீண்டும் நடந்துள்ள செயின் பறிப்பு சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×