search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீட்டிற்குள் மழைநீர் புகுந்தது கூட தெரியாமல் இருந்த மாற்றுத்திறனாளி தம்பதியினர்
    X

    வீட்டிற்குள் மழைநீர் புகுந்தது கூட தெரியாமல் இருந்த மாற்றுத்திறனாளி தம்பதியினர்

    • தொடர் மழையினால் அவர்களுடைய வீடு முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது.
    • வீட்டில் தான் அந்த தம்பதி வசிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதி சங்கரலிங்க புரம். இங்குள்ள 2-வது தெருவில் வசித்து வருபவர்கள் மாரிமுத்து - அடைக்கம்மை தம்பதியினர். மாற்றுத்திறனாளிகளான இவர்கள் இருவரும் கண்பார்வை இழந்தவர்கள்.

    ஊதுபத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி உள்ளிட்டவைகளை விற்பனை செய்து அன்றாடம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தங்களது வாழ்வினை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தொடர் மழை இந்த மாற்றுத்திறனாளி தம்பதியின் வாழ்வினை அடியோடு புரட்டி போட்டு உள்ளது.

    இவர்கள் வாழ்ந்த ஓட்டு வீடு ஏற்கனவே லேசாக சேதம் அடைந்து காணப்பட்ட நிலையில் தொடர் மழைக்கு முற்றிலுமாக சேதம் அடைந்து காணப்படுகிறது. தொடர் மழையின் போது வீட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் சேதம் அடைந்தது தெரியாமலும், மழைநீர் உள்ளே வருவது தெரியாமலும் இருந்த மாற்றுத்திறனாளி தம்பதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு தங்கள் வீட்டில் தங்க வைத்து உதவி செய்துள்ளனர்.

    தொடர் மழையினால் அவர்களுடைய வீடு முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் விழக் கூடிய சூழ்நிலை இருக்கிறது. தற்போது அந்த வீட்டில் தான் அந்த தம்பதி வசிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

    தொடர்மழை காரணமாக ஏற்கனவே தங்களுடைய ஊதுபத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி விற்பனை செய்ய முடியாத நிலை ஒருபுறம் உள்ளது. மறுபுறம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய வீடு என தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர் மாரிமுத்து - அடைக்கம்மை தம்பதியினர்.

    தொடர் மழையின் காரணமாக தங்களுடைய வாழ்வாதாரத்தையும் இழந்து, வீட்டையும் இழந்து பரிதவித்து வருவதாகவும், தங்களுக்கு அரசு உரிய உதவி செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் மாற்றுத்திறனாளி தம்பதியினர்.

    Next Story
    ×