என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

புரட்சித் தமிழர் பேரவை பிளக்ஸ் பேனரால் அ.தி.மு.க.வில் பரபரப்பு
- அனைத்தும் கட்சி தலைமையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன.
- பேனர் வைத்திருந்தது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பரமத்திவேலூர்:
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். மன்றம், ெஜயலிலதா பேரவை, மகளிர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில் நுட்ப பிரிவு, மீனவரணி, நெசவாளர், இலக்கியம், அண்ணா தொழிற்சங்கம், வக்கீல் அணி உள்ளிட்ட அணிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அணிகளுக்கு மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் நியமித்து கட்சியை பலப்படுத்தி வருகின்றனர். இவை அனைத்தும் கட்சி தலைமையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன.
சமீபத்தில் மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் பட்டம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் மற்றும் எலச்சிப்பாளையம் ஒன்றிய செயலாளர் சக்திவேல் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். அவரை வரவேற்று பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் மோகனூர் ஒன்றியம் கீழ்பாலப்பட்டியை சேர்ந்த கோபிநாத் என்பவர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று புரட்சித் தமிழர் பேரவை சார்பில் என குறிப்பிட்டு பிளக்ஸ் பேனர் வைத்திருந்தார்.
இதை கட்சி நிர்வாகிகள் பலர் பார்த்து விட்டு சென்றனர். கட்சி தலைமை இப்படி ஒரு பேரவையை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அதற்குள் புரட்சித் தமிழர் பேரவை என பேனர் வைத்திருந்தது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எம்.ஜி.ஆர்-க்கு எம்.ஜி.ஆர் மன்றம், ஜெயலலிதாவுக்கு ஜெயலலிதா பேரவை என்பது போல் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் பேரவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதா? என அக்கட்சியினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.






