search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெருந்துறை அருகே கொலை குற்றவாளிகளை பிடிக்க துப்பாக்கி சூடு நடத்திய போலீசார்
    X

    பெருந்துறை அருகே கொலை குற்றவாளிகளை பிடிக்க துப்பாக்கி சூடு நடத்திய போலீசார்

    • சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த குள்ளம்பாளையத்தில் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • குடியிருப்பு பகுதிகள் நிறைந்த இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாக ரவுடிகளின் தொல்லை அதிகரித்துள்ளதால் அவர்களை பிடிக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். பதுங்கி இருக்கும் ரவுடிகளை தனிப்படை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    சமீபத்தில் ரவுடிகளை பிடிக்க முயன்ற போது அவர்கள் போலீசாரை தாக்க முயன்ற போது தற்பாதுகாப்புக்காக துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளனர். சமீபத்தில் கூட காஞ்சிபுரத்தில் 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இதேபோல் துப்பாக்கி சூடு சம்பவம் மீண்டும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள குள்ளம்பாளையம் பகுதியில் நடைபெற்று உள்ளது.

    இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

    திருநெல்வேலி மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த சிவசுப்பு என்கிற சுப்பிரமணி (26) என்பவரை பிடிக்க திருநெல்வேலி போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். ஆனால் சுப்பிரமணி போலீசார் கண்ணில் தென்படாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். திருநெல்வேலியில் சுப்பிரமணி மீது கொலை, கொள்ளை, ரேஷன் அரிசி கடத்தல், கஞ்சா உள்பட மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    சுப்பிரமணி தனது கூட்டாளிகள் முத்து மணிகண்டன், இசக்கி, வசந்தகுமார், சத்யா 4 பேருடன் ஒவ்வொரு ஊராக தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார். சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க திருநெல்வேலி சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் சுப்பிரமணி குறித்த தகவல்களை ரகசியமாக சேகரித்து வந்தனர்.


    அதன்படி தனிப்படை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதில் சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த குள்ளம்பாளையத்தில் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோ தலைமையில் மற்றொரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் குள்ளம்பாளையத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் மறைந்திருந்து சுப்பிரமணி தங்கி இருந்த வீட்டை ரகசியமாக கண்காணித்தனர்.

    அப்போது அந்த வீட்டில் சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதனையடுத்து தனிப்படை போலீசார் திடீரென சுப்பிரமணி தங்கி இருந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். இதை சற்றும் எதிர்பாராத சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சுப்பிரமணி வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோ மீது வீசி உள்ளார். அப்போது சுதாரித்து கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோ தற்காப்புக்காக ஒரு ரவுண்டு துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஆனால் அந்த குண்டு சுப்பிரமணி மீது படாமல் வீட்டின் ஓரத்தில் பாய்ந்தது. இதனையடுத்து சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரும் வீட்டின் பின்பக்க கதவை திறந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினர். போலீசாரும் அவர்களை பிடிக்க விரட்டி உள்ளனர். ஆனால் அதற்குள் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    குடியிருப்பு பகுதிகள் நிறைந்த இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து தனிப்படை போலீசார் பெருந்துறை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனை அடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தேசிய நெடுஞ்சாலை மற்றும் சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×