search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரதமர் மோடி 19-ந்தேதி திருப்பூர் வருகை
    X

    பிரதமர் மோடி 19-ந்தேதி திருப்பூர் வருகை

    • பிரதமர் மோடியை நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பிதழை வழங்கினார்.
    • பொதுக்கூட்டம் வருகிற 19-ந்தேதி திருப்பூரில் நடைபெற உள்ளது.

    திருப்பூர்:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ந்தேதி திருச்சிக்கு வருகை தந்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் , பிறகு திருச்சி புதிய விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்ததுடன், பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

    இந்தநிலையில், தமிழகத்தில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க நேரில் வருமாறு பிரதமர் மோடிக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. பிரதமர் மோடியை நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பிதழை வழங்கினார். பிரதமர் மோடி வருகை தருவதாக உறுதியளித்ததாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்கும் போது கூறியிருந்தார்.

    இந்தநிலையில், சென்னையில் நடைபெறும் கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருகிற 19-ந்தேதி சென்னை வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திருப்பூர் செல்கிறார்.

    திருப்பூரில் பா.ஜ.க., சார்பில் நடத்தும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்க உள்ளார். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த மருத்துவ மனையை திறந்து வைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.


    பிரதமர் மோடி திருப்பூர் வருகை தர உள்ளதையடுத்து ஏற்பாடுகள் குறித்த அவசர ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாயிண்ட் மணி, மாநில செயலாளர் மலர்கொடி, செயற்குழு உறுப்பினர் நாச்சிமுத்து மற்றும் மண்டல தலைவர்கள், மாநில, மாவட்ட, அணி பிரிவு தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி கொங்கு மண்டலத்தில் பா.ஜனதாவின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பெருந்துறை, அந்தியூர், பவானி, கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதிகளில் இருந்து கட்சியினர் வந்து செல்லும் வகையில் பொதுக்கூட்ட இடம் தேர்வு பணிகளில் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து மாவட்ட தலைவர் செந்தில்வேல் கூறும்போது, பொதுக்கூட்டம் வருகிற 19-ந்தேதி திருப்பூரில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். பொதுக்கூட்டம் நடத்த திருப்பூர் பி.என்.சாலை, ஆண்டிபாளையம், மாதப்பூர், பல்லடம் ஆகிய 4 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, ஒரு இடம் இறுதி செய்யப்படும். அதற்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டுள்ளோம். பிரதமர் வருகை தரும் நேரம், பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். முதல் கட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ள நிலையில், நாளை 7-ந்தேதி சிறுபூலுவபட்டி அம்மன் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடம் முடிவு செய்யப்பட்டு அதற்கேற்ப நிகழ்ச்சிகள் குறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படவுள்ளது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி ஒரே மாதத்தில் 2-வது முறையாக தமிழகம் வருகை தர உள்ளதும், திருப்பூரில் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதும், பா.ஜ.க., நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×