search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒவ்வொரு பகுதியிலும் நீண்ட வரிசை: ரூ.6000 டோக்கன் வாங்க அதிகாலையில் ரேஷன் கடைகளில் குவிந்த மக்கள்
    X

    ஒவ்வொரு பகுதியிலும் நீண்ட வரிசை: ரூ.6000 டோக்கன் வாங்க அதிகாலையில் ரேஷன் கடைகளில் குவிந்த மக்கள்

    • ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் 1000 முதல் 1,500 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
    • பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் உதவி தொகை பெற விரிவான ஏற்பாடுகளை உணவு வழங்கல்துறை செய்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் வெள்ளத்தால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டனர். வீட்டில் உள்ள பொருட்கள், உடமைகள், கடுமையாக சேதம் அடைந்தன.

    பெரும்பாலான பகுதிகளில் அதிகளவில் பாதிப்பு இருந்தாலும் ஒரு சில இடங்களில் குறைவாக இருந்தன. இருந்தாலும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்படுகிறது.

    தமிழக அரசின் சார்பில் ரூ.6000 நிவாரண உதவி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சென்னையில் 15 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன.

    வெள்ள நிவாரண நிதி நாளை (17-ந்தேதி) முதல் வழங்கப்படுகிறது. அதற்கு முன்னதாக குடும்ப அட்டைதாரர்களுக்கு நேற்று முதல் டோக்கன் வினியோகிக்கப்படுகிறது. அவரவர் பொருட்கள் வாங்கக் கூடிய ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் வழங்கப்படுவதால் அந்த பகுதிகளில் நீண்ட வரிசை காணப்படுகிறது.

    சென்னையில் 1000-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடைகள் முன்பும் பொதுமக்கள் வரிசையில் காத்து நின்றனர். இன்று 2-வது நாளாக டோக்கன் வழங்கப்படுகிறது.

    ஒரு சில ரேஷன் கடைகளில் இன்றுதான் டோக்கன் வினியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் 1000 முதல் 1,500 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். நாளை முதல் நிவாரண நிதி வழங்கப்படுவதால் இன்று கூட்டம் அலைமோதியது.

    வடசென்னை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் அதிகாலை 5 மணிக்கே வரிசையில் நிற்க தொடங்கினர். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பெரியவர்கள் வரிசையில் உட்கார்ந்து இருந்தனர்.

    நேரம் செல்ல செல்ல வரிசை நீண்டு கொண்டே போனது. ஒரு தெருவில் இருந்து அடுத்த தெருவரை மக்கள் காத்து நின்றனர். காலை 8 மணிக்கே ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    டோக்கனில் கடையின் பெயர், குடும்ப அட்டைதாரர் பெயர், குடும்ப அட்டை எண், நிவாரண தொகை வழங்கப்படும் நாள், நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்திற்கு ரேஷன் கடைக்கு சென்று நிவாரணத் தொகை பெற வேண்டும்.

    நிவாரணத் தொகை ஒவ்வொரு கடைகளிலும் தினமும் 100 பேர் முதல் 300 பேர் வரை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி தொடர்ந்து நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் உதவி தொகை பெற விரிவான ஏற்பாடுகளை உணவு வழங்கல்துறை செய்துள்ளது.

    ஒருசில ரேஷன் கடைகள் முன்பு கூட்டம் அதிகமாக இருப்பதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு வரிசையை ஒழுங்குப்படுத்தினர்.

    சென்னை நகரில் எங்கு பார்த்தாலும் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவதால் மக்கள் கூட்டம் கூட்டமாக உதவிகளை பெற சென்று வருகிறார்கள். ஒவ்வொரு தெருக்களிலும் மக்கள் வரிசையில் நிற்பதை காண முடிகிறது.

    சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் போட்டி போட்டுக் கொண்டு நிவாரண பொருட்களை ஒருபுறம் வழங்கி வருகின்றனர்.

    Next Story
    ×