search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகம் முழுவதும் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 17 பேர் கைது
    X

    தமிழகம் முழுவதும் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 17 பேர் கைது

    • அழகிய குரல் வளம் கொண்ட பெண்களை வேலைக்கு சேர்த்து அவர்கள் மூலம் வாடிக்கையாளர்களை இழுத்துள்ளனர்.
    • இப்படி பண ஆசை, பெண்களின் கவர்ச்சியான பேச்சுக்கு மயங்கி பலரும் பணம் முதலீடு செய்ய வந்துள்ளனர்.

    கன்னியாகுமரி:

    ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுவோரும் இருப்பார்கள் என்பது முதியோர் வாக்கு.

    குறுகிய காலத்தில் செல்வந்தர் ஆக வேண்டும் என்று விரும்புவோர் அதற்கான வழிகளையே யோசிப்பார்கள். அத்தகையோரை குறிவைத்து மோசடி நபர்கள் பணம் பறிக்கும் செயல்களை அரங்கேற்றி வருகிறார்கள்.

    இதுபற்றி சமூக ஊடகங்கள், பத்திரிகைகளில் பலமுறை எச்சரிக்கை செய்தி வந்தாலும் இன்னும் ஏமாறுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். கன்னியாகுமரியில் அப்படி நடந்த ஏமாற்று செயல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    கன்னியாகுமரி அருகே வடக்கு குண்டல் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த சில நாட்களாக வெளியூர் நபர்கள் வருகை அதிகமாக இருந்தது. வருபவர்கள் கன்னியாகுமரியை சுற்றி பார்க்க செல்வதற்கு பதில் லாட்ஜூக்கு வருவதும், சிறிது நேரத்தில் திரும்பி செல்வதுமாக இருந்தனர்.

    இது அந்த பகுதி மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே அவர்கள் இதுபற்றி கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். டி.எஸ்.பி.ராஜா தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீரென அந்த லாட்ஜூக்கு சென்றனர்.

    போலீசாரை கண்டதும் அந்த கும்பல் லாட்ஜ் அறைகளில் இருந்து தப்பியோடினர். சிலர் அருகில் இருந்த புதருக்குள் புகுந்து மறைந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    ஆண்கள், பெண்கள் என சுமார் 35 பேரை பிடித்த போலீசார் அவர்கள் அனைவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    போலீசாரின் விசாரணையில் தான் அந்த லாட்ஜூக்கு வந்து சென்றவர்கள் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதாவது பணம் கொடுப்பவர் இந்த கும்பலிடம் ஒரு ரூபாய் கொடுத்தால் அடுத்த மாதம் அந்த கும்பல், பணம் கொடுத்தவர்களுக்கு 2 ரூபாயாக திருப்பி கொடுப்பார்கள்.

    இப்படி ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஒரே மாதத்தில் ரூ. 2 ஆயிரம் திரும்ப கிடைக்கும். இதுவே ஒரு லட்சம் கொடுத்தால் அடுத்த மாதம் ரூ.2 லட்சம் கிடைக்கும். இப்படி பணத்தை முதலீடு செய்தால் ஒரே வருடத்தில் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என்று இந்த கும்பல் கூறியுள்ளது.

    இதற்காக இந்த கும்பலை சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் ஏஜெண்டுகளை நியமித்து உள்ளனர். அவர்கள் மூலம் அந்த மாவட்டத்தில் பணம் வைத்திருக்கும் நபர்களை தெரிந்து கொண்டு அவர்களிடம் பணம் இரட்டிப்பு குறித்து பேசி அதனை தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய கூறியுள்ளனர்.

    இதற்காக அழகிய குரல் வளம் கொண்ட பெண்களை வேலைக்கு சேர்த்து அவர்கள் மூலம் வாடிக்கையாளர்களை இழுத்துள்ளனர். இப்படி பண ஆசை, பெண்களின் கவர்ச்சியான பேச்சுக்கு மயங்கி பலரும் பணம் முதலீடு செய்ய வந்துள்ளனர்.

    அதிக வாடிக்கையாளர்களை இழுத்து வரும் ஏஜெண்டுகளுக்கு நிறுவனத்தினர் சொகுசு கார்களை பரிசாக வழங்கி உள்ளனர். இதற்கு ஆசைப்பட்ட பல ஏஜெண்டுகள், பணம் மோசடிக்கு துணை போய் உள்ளனர்.

    போலீஸ் விசாரணையில் தெரியவந்த இந்த தகவல்களை தொடர்ந்து இந்த மோசடிக்கு துணை போனவர்கள் உள்பட அனைவரையும் பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண்பிரசாத் உத்தரவிட்டார்.

    இதையடுத்து கன்னியாகுமரி லாட்ஜில் கொஞ்சும் குரலில் பேசி வாடிக்கையாளர்களை வளைத்த 2 பெண்கள் மற்றும் பண இரட்டிப்பு மோசடிக்கு மூளையாக செயல்பட்ட மதுரை பேரையூரை சேர்ந்த சுந்தரபாண்டியன், ராஜாமணி உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.11 லட்சத்து 4 ஆயிரத்து 810 ரொக்க பணம், 3 சொகுசு கார்கள், 32 செல்போன்கள், 2 லேப் டாப்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இந்த கும்பல் தமிழகத்தில் வேறு எங்கெல்லாம் கைவரிசை காட்டினார்கள் என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×