search icon
என் மலர்tooltip icon

  தமிழ்நாடு

  திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  X

  திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தொழில் துறையில் மிக வேகமாக முன்னேற்றத்தை நோக்கி தமிழகம் போய்க்கொண்டிருக்கிறது.
  • தற்போது தமிழகத்திற்கு புதிய தொழிற்சாலைகள் வரத் தொடங்கி இருக்கிறது.

  திருச்சி:

  தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்தும் வருகிறார்.

  அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் இன்று 3 இடங்களில் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் காலை 9.30 மணிக்கு திருச்சி வருகை தந்தார்.

  அவருடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வந்தார். விமான நிலையத்தில் அவர்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தங்கம் தென்னரசு, கலெக்டர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.

  இதையடுத்து முதல் நிகழ்வாக திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். விழாவுக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார்.

  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் வரவேற்றார். இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.655 கோடி மதிப்பீட்டிலான ஸ்ரீரங்கம் ஸ்டெம் பூங்கா, கீழபுலிவார்டு ரோடு லாரி டெர்மினல் உள்ளிட்ட 5,639 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

  மேலும் ரூ.308 கோடி மதிப்பீட்டிலான 5,951 புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து ரூ.79 கோடி மதிப்பீட்டில் 22,716 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

  அப்போது அவர் பேசியதாவது:-

  திருச்சியில் ஒரு விழா நடைபெறுகிறது என்றாலே அது பிரம்மாண்டமாக தான் நடக்கும். சிறிய விழாவாக இருந்தாலும் அது பெரிய அரசு விழாவாகத்தான் நடக்கும். பெரிய பொதுக்கூட்டமாக இருந்தாலும் அதனை மாபெரும் மாநாடாகத்தான் திருச்சியில் காணமுடியும்.

  மாநாடு என்று அறிவித்தால் பிரம்மாண்டமானதாகத்தான் நடக்கும். அப்படி நடந்தால் தான் அது திருச்சி, அப்படி நடத்தினால் தான் அது கே.என்.நேரு. அந்தப் புகழை இந்த நிகழ்ச்சியின் மூலமாகவும் அவர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

  நிர்வாகத்துறையின் மூலமாக தமிழ்நாட்டிற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை இன்றைக்கு ஏராளமாக செய்து வரக்கூடியவர் தான் அமைச்சர் நேரு. அரசு நிகழ்ச்சி என்று தேதி வாங்கி அரசு சார்பிலான மாநாடாக இதனை ஏற்பாடு செய்து மிக எழுச்சியோடு நடத்திக் கொண்டிருக்க கூடிய நேருவுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இந்த நிகழ்ச்சிக்கு அடுத்ததாக தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தினுடைய இரண்டாவது அலகினை திறந்து வைக்க உள்ளேன்.

  தொழில் துறையில் மிக வேகமாக முன்னேற்றத்தை நோக்கி தமிழகம் போய்க்கொண்டிருக்கிறது. அதனால் தற்போது தமிழகத்திற்கு புதிய தொழிற்சாலைகள் வரத் தொடங்கி இருக்கிறது. திறப்பு விழா நிகழ்ச்சியை தொடர்ந்து மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தினை அதாவது ஒரு கோடியே ஒன்றாவது பயனாளியை நேரில் சந்திக்க சன்னாசிப்பட்டி என்ற கிராமத்திற்கு நான் செல்ல இருக்கிறேன்.

  நம்முடைய கழக ஆட்சி அமைந்ததும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2021 ஆகஸ்ட் 5-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாமணப்பள்ளி கிராமத்தில் வசிக்கக்கூடிய சரோஜா என்பவர் தான் இந்த திட்டத்தில் சிகிச்சை பெற்ற முதலாவது நபர். இன்று நான் சந்திக்க இருப்பவர் ஒரு கோடியே 1-வது நபர். ஏழை, எளிய மக்கள் உடல் நலம் பாதிக்கப்படும் போது வெளியூருக்கு வந்து சிகிச்சை பெறக்கூடிய வாய்ப்பு வசதி இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு அவர்களது வீட்டிற்கே சென்று சிகிச்சை அளிக்கக்கூடிய மகத்தான திட்டம் தான் இந்த திட்டம்.

  இந்த ஓராண்டு காலத்தில் ஒரு கோடி பேருக்கு மருந்து பெட்டகங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இது சாதாரண சாதனை அல்ல, தொடர் ஓட்டத்தால் நிகழ்ந்துள்ள சாதனை. அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒரு மாரத்தான் வீரர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. சாலையில் மட்டுமல்ல துறையின் செயல்பாடுகளிலும் மாரத்தான் போல நெடுந்தூரம் களைப்பின்றி பயணித்து இலக்குகளை அடைந்து காட்டக்கூடியவர் தான் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

  ஒரு கோடி பேருக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் தேவைப்படக்கூடிய அனைத்து மக்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்கும் திட்டமாக அதனை நிகழ்த்தி காட்ட இருக்கக்கூடிய மா.சுப்பிரமணியனை உங்கள் அனைவரின் சார்பில் நான் பாராட்டுகிறேன்.

  பள்ளி கல்வி துறையை இந்தியாவிலேயே மிகச்சிறந்த துறையாக ஆக்க நித்தமும் உழைத்துக் கொண்டிருக்கிறார் தம்பி அன்பில் மகேஷ். அதே போல் இந்த மேடைக்கு புதியவராக அமைச்சரவைக்கு புதியவராக வருகை தந்துள்ள தம்பி உதயநிதி அமைச்சரவைக்குத்தான் புதியவரே தவிர உங்களுக்கு நன்கு அறிமுகமானவர். உங்களுக்கு பழைய முகம்தான். அவர் அமைச்சராக பொறுப்பேற்ற போது விமர்சனம் வந்தது. வரத்தான் செய்யும், அவர் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற போதும் விமர்சனங்கள் வந்தது.

  ஆனால் அதற்கெல்லாம் தன்னுடைய செயல்பாடுகளால் பதில் சொல்லி அனைவரின் பாராட்டையும் பெற்றார். தன்னை நிரூபித்து காட்டினார். உதயநிதிக்கு ஏராளமான பொறுப்புகள் இருக்கின்றன. மகளிர் மேம்பாடு, சிறப்பு திட்ட செயலாக்கம், வறுமை ஒழிப்பு, கிராமப்புற கடன்கள் என பல துறைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் தமிழ்நாட்டில் ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, விளிம்பு நிலை மக்களை மேம்படுத்த வேண்டும் என்பதே ஆகும்.

  முதலமைச்சராக நம்பிக்கையோடு நான் இதை எதிர்பார்க்கிறேன். இந்த அரசு விழா மக்கள் நல விழாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

  சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வெல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்த நம் மாநில இளைஞர்களுக்கு உலக தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்கக்கூடிய வகையில் தமிழ்நாட்டில் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகடாமி உருவாக்கப்படும் என்று சட்டமன்ற பேரவையில் நான் அறிவித்திருந்தேன்.

  அதில் ஒன்று திருச்சியில் அமைக்கப்படும் என்பதை இந்த விழா மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு விழாவின் மூலமாக ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் நேரடியாக பயனடைய கூடிய வகையில் நாம் அந்த விழாக்களை ஏற்பாடு செய்கிறோம்.

  இந்த திராவிட அரசாங்கமானது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தரப்பு மக்களுக்கும் எல்லா உதவிகளையும் செய்து வரக்கூடியது என்பதற்கு அடையாளம்தான் இந்த விழா. பொருளாதாரத்தில் மேம்பட மகளிர் சுய உதவி குழுக்களை கொண்டு வந்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்.

  பெண்களுக்கு பேருந்து கட்டணம் இல்லை என்று சொன்னதன் மூலமாக சமூக பொருளாதார வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. வீட்டை விட்டு வெளியே தொழில்கள் தொடங்க வருவதற்கு இதன் மூலமாக பெண்களுடைய ஆளுமை வளர்ந்துள்ளது. உயர்கல்வி கற்க கல்லூரிக்கு வரக்கூடிய பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதன் மூலமாக பெண்கள் உயர் கல்வி கற்பது உயர்ந்துள்ளது. இந்த வரிசையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன்கள் வழங்கக்கூடிய விழா இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நானும் உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதல்வராக இருந்தபோது பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு சுய உதவிக்குழு கடன்கள் வழங்கினேன்.

  ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு பிறகு ஆட்சியாளர்கள் அதனை முறையாக செயல்படுத்தவில்லை. சட்டமன்ற தேர்தல் நேரத்தில் நான் பிரச்சாரத்திற்கு சென்றபோது மீண்டும் மீண்டும் என்னிடத்தில் பெண்கள் சொன்னது நீங்கள் ஆட்சிக்கு வந்து சரி செய்து தரணும் என்பது தான். அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. அதனுடைய அடையாளம் தான் இந்த விழா.

  கடந்த ஆட்சியாளர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்குவதையும் நிறுத்தி விட்டார்கள். நாம் மீண்டும் 2021-ல் ஆட்சி பொறுப்பேற்றதும் மணிமேகலை விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்றைக்கு 33 சமுதாய மகளிர் அமைப்புக்கு மணிமேகலை விருதும், 55 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட இருக்கிறது.

  தமிழர் வாழ்வு, தமிழ்நாடு செழிக்க தொய்வின்றி செயலாற்றிக்கொண்டு இருக்கிறோம். தடங்கலின்றி திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். திராவிட மாடல் கொள்கைப்படி எல்லாருக்கும், எல்லம் என்ற கருத்தியலின் அடிப்படையில் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

  காலநிலை மாற்றத்தை அறிவதில் முன்மாதிரி மாநிலமாக இருக்கிறது. சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட்டி போட்டியை சென்னையில் நடத்தி இருக்கின்றோம்.

  கடந்த ஓராண்டில் நான் 8 ஆயிரத்து 549 கி.மீ. தூரம் பயணித்து இருக்கிறேன். அதன் மூலம் 647 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 551 நிகழ்ச்சிகள் அரசு விழாக்கள். 96 கட்சி நிகழ்ச்சிகள். தமிழக்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதன் மூலம் ரூ.1 கோடியே 3 லட்சத்து 74 ஆயிரத்து 355 பயனாளிகளுக்கு நேரடியாக நலத்திட்டங்களை சேர்த்து இருக்கிறோம்.

  இதற்கிடையே கொரோனா தாக்கி எனது உடல் நிலை நலிவுற்றது. சிகிச்சை எடுத்துக்கொண்டேன். இருப்பினும் எனது பயணம் தடைபடவில்லை. மக்களுக்கான எனது பணி நிற்கவே நிற்காது. நம்பர் ஒன் முதல்வர் என்பதும், நம்பர் ஒன் மாநிலம் என்பதும் ஏழைகளின் சிரிப்பும், மகளிரின் மகிழ்ச்சியும்தான் உண்மையான அளவீடு.

  நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது சுய உதவிக்குழுக்கள் என் வசம் இருந்தன. தற்போது அது தம்பி உதயநிதியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதுபோன்று சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி பெண்கள் வாழ்வை மேம்படுத்த வேண்டும்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  Next Story
  ×