search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சனாதனத்தை தொடர்ந்து எப்போதும் எதிர்ப்போம்: அமைச்சர் உதயநிதி மீண்டும் உறுதியான பேட்டி
    X

    சனாதனத்தை தொடர்ந்து எப்போதும் எதிர்ப்போம்: அமைச்சர் உதயநிதி மீண்டும் உறுதியான பேட்டி

    • ஆன்லைன் மூலம் ‘நீட் தடை’ என்ற தலைப்பில் கருத்து தெரிவிக்கும் பகுதியில் 3 லட்சம் பேர் பங்கேற்று கையெழுத்து போட்டுள்ளனர்.
    • நீதிமன்ற வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்.

    சென்னை:

    தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக இளைஞர் அணி, மருத்துவர் அணி மற்றும் மாணவர் அணி ஆகியவை சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது.

    அதன் ஒரு பகுதியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கெனவே தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கையெழுத்து பெற சத்தியமூர்த்தி பவன் சென்றார். அங்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட தலைவர்களிடம் கையெழுத்து பெற்றார்.

    இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் கையெழுத்து பெறுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்துக்கு சென்றார். அங்கு கட்சித் தலைவர் திருமாவளவனிடம் அவர் கையெழுத்து பெற்றார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் , எம்.எல்.ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷா நவாஸ், பனையூர் பாபு மற்றும் நிர்வாகிகள் கையெழுத்து போட்டனர்.

    இதில், திமுக எம்.எல்.ஏ. மயிலை வேலு கலந்து கொண்டார்.

    பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீட் விலக்கு நம் இலக்கு என்ற கையெழுத்து இயக்கம் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து பெறுவதற்காக தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 6 வருடத்தில் அனிதா ஆரம்பித்து 22 மாணவர்கள் உயிரிழந்து உள்ளனர். இதுவரை 10 லட்சம் கையெழுத்து பெற்றுள்ளோம்.

    ஆன்லைன் மூலம் 'நீட் தடை' என்ற தலைப்பில் கருத்து தெரிவிக்கும் பகுதியில் 3 லட்சம் பேர் பங்கேற்று கையெழுத்து போட்டுள்ளனர்.

    அனைத்து இயக்கமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அடுத்தகட்டமாக அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சி தலைவர்களை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். நாங்கள் உண்மையாக போராடி வருகிறோம், எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்று, ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒன்று என்று இல்லை. இது தி.மு.க. பிரச்சனை மட்டும் இல்லை.

    கேள்வி:- சனாதன மாநாட்டில் பேசியதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளாரே?

    பதில்:- அம்பேத்கர், பெரியார் பேசியதை விட தவறாக ஒன்றும் நான் பேசவில்லை. நான் பேசியது தவறு இல்லை. அமைச்சர் பதவி இன்று வரும், நாளைக்கு போகும். சட்டமன்ற உறுப்பினர் பதவி இன்றைக்கு வரும், நாளைக்கு போகும். இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு இன்றைக்கு வரும், நாளைக்கு போகும். அதைவிட முக்கியம் முதலில் மனிதனாக இருக்க வேண்டும்.

    நீட் தேர்வு என்பது 6 வருட பிரச்சனைதான். முதலில் அதை ரத்து செய்வோம். சனாதனத்தை பற்றி பல ஆண்டுகளாக பேசி வருகிறோம். இது பல நூறு ஆண்டு கால பிரச்சனை. சனாதனத்தை எந்த காலத்திலும், எப்போதும் எதிர்ப்போம். நீதிமன்ற வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது இங்கு வந்து பேசும் போது, 'ஒவ்வொரு மாநிலத்திலும், மாநில பட்டியலில் கல்வி உரிமை இருக்க வேண்டும் என்றால் அதை கொடுப்போம். ஒவ்வொரு மாநிலத்துக்கும் என்ன தேவையோ அதை செய்து கொடுப்போம். தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்' என்று கூறி இருக்கிறார்.

    கேள்வி:- நீட் தேர்வு விலக்கு கிடையாது, நீட் தேர்வு எழுதித்தான் ஆக வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் கடைசி நேரத்தில் சொல்லும் போது மாணவர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறதே?

    பதில்:- 6 வருடமாக நீட் விலக்கு கோரிக்கையை வைத்து வருகிறோம். சட்டமன்றத்தில் 230 சட்டமன்ற உறுப்பினர்கள் இதைத்தான் சொல்லி இருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். மக்களின் எண்ணத்தை சட்டமன்றத்தில் பேசுபவர்கள். இதற்கு ஆதரவு தெரிவிக்காத 4 சட்டமன்ற உறுப்பினர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும்.

    நாங்கள் மாணவர்களை குழப்பவில்லை. இன்னொரு உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் தான் நாங்கள் செயல்படுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில் 'தி.மு.க. நடத்துகின்ற கையெழுத்து இயக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் முழுமையாக பங்கேற்கிறது' என்றார்.

    Next Story
    ×