என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை மாநகரத்தில் புதைவட மின் கேபிள் அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படும்- அமைச்சர் தகவல்
- ஏழு கோட்டங்களில் பணிகளுக்கான மதிப்பீடு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
- முன்னுரிமை அடிப்படையில் மயிலாடுதுறை நகரப் பகுதியில் பணிகள் தொடங்கப்படும்.
சென்னை:
சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மயிலாடுதுறை நகரப் பகுதியில் உள்ள மின் கம்பிகளை பூமிக்கடியில் புதைவட கம்பிகளாக மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேர் ஓடும் வீதியிலும் மின் கம்பிகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் எனவும் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். ராஜகுமார், வேல்முருகன் ஆகியோர் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை மாநகரத்தில் மின் கம்பிகளை புதைவட கேபிள்களாக அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், பெரம்பூர், ஆவடி கோட்டங்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதோடு, தாம்பரம், அடையார் கோட்டங்களில் பணிகள் நடைபெற்ற வருவதாகவும் கூறினார்.
மேலும், ஏழு கோட்டங்களில் பணிகளுக்கான மதிப்பீடு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், முன்னுரிமை அடிப்படையில் மயிலாடுதுறை நகரப் பகுதியில் பணிகள் தொடங்கப்படும் எனவும் கூறினார்.
அதேபோல், தேரோடும் வீதிகளில் இருக்கக்கூடிய மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்ற ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளதாக கூறிய அவர், இதன்படி நான்கு கோவில்களில் ஏற்கனவே அந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், முன்னுரிமை அடிப்படையில் அவசர தேவையின் அடிப்படையில் அனைத்து கோவில்களிலும் பணிகள் செய்துத்தரப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.






