search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தவறான தகவல்களை சொல்லும் அண்ணாமலைக்கு கோ பேக் சொல்வதுதான் பொருத்தமானது- கே.எஸ்.அழகிரி பேட்டி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தவறான தகவல்களை சொல்லும் அண்ணாமலைக்கு 'கோ பேக்' சொல்வதுதான் பொருத்தமானது- கே.எஸ்.அழகிரி பேட்டி

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்டா பகுதியை சேர்ந்தவர்.
    • காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு சரியான வழிகாட்டுதல்களை கூறி இருக்கிறது.

    சென்னை:

    காவிரியின் குறுக்கே மேகதாது அணைகட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருவது பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் பெங்களூரில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டால் திரும்பி வரும் போது 'கோ பேக் ஸ்டாலின்' என்று போராட்டம் நடத்துவோம் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

    ஜனநாயகத்தில் யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அண்ணாமலை சொல்வது தான் வேடிக்கையாக உள்ளது.

    இந்த பிரச்சினையை வைத்து முழுக்க முழுக்க அரசியல் செய்ய நினைக்கிறார். கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் மேகதாது அணை கட்டுவோம் என்று சொல்கிறார். அதை பிடித்துக் கொண்டு அண்ணாமலை பேசுகிறார்.

    நமது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை சுட்டிக்காட்டி அணை கட்ட முடியாது என்பதை தெளிவாக கூறி இருக்கிறார். அதைப்பற்றி அண்ணாமலை எதுவும் பேசாதது ஏன்?

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்டா பகுதியை சேர்ந்தவர். 'மண்ணின் மைந்தர்' இந்த விஷயத்தில் கவனக் குறைவாக இருப்பாரா? விட்டுத்தான் கொடுப்பாரா? தமிழக அரசின் முயற்சிகளை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. தவறான தகவல்களை மக்கள் மத்தியில் சொல்லக் கூடாது.

    இந்த பிரச்சினைக்கு காரணமே பா.ஜனதாதானே. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் பொம்மை முதல்-மந்திரியாக இருந்தார். அப்போது மேகதாது அணை தொடர்பான வரைவு திட்டம் ஒன்றை தயாரித்து மத்திய நீர்வ ளத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று விட்டார்கள். சட்டப்படி அந்த அனுமதி கொடுத்திருக்கக் கூடாது. ஆனால் மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா அரசுகள் இருந்ததால் ஒப்புதல் பெற்று விட்டார்கள்.

    அப்போது தமிழக காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. வாய்மூடிமவுனமாக இருந்துவிட்டது.

    அப்போது தமிழகத்தில் பா.ஜனதா இருந்ததா என்பதே தெரியவில்லை. இந்த செயல்கள் அண்ணாமலைக்கு தெரியுமா? அல்லது தெரிந்தும் வேண்டுமென்றே திசை திருப்புகிறாரா?

    காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு சரியான வழிகாட்டுதல்களை கூறி இருக்கிறது. அதை மீறி எந்த அரசும் செயல்பட முடியாது.

    அதற்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கும் என்ன சம்பந்தம்? இதற்காக 'கோ பேக்' என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? இதை பொது மக்கள் ஏற்பார்களா?

    முறையாக பார்த்தால் தவறாக சொல்லும் அண்ணாமலைதான் வெளியேற வேண்டும். அவருக்கு 'கோ பேக்' சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.பெங்களூரில் நடக்கப் போவது எதிர்க்கட்சிகள் கூட்டம். அதற்கும் இந்த பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்? அப்படிப் பார்த்தால் பா.ஜனதா காரர்கள் பெங்களூர் செல்லமாட்டார்களா?

    இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

    Next Story
    ×