என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பெண் கொலையில் திருப்பம்: கள்ளக்காதலை கைவிடாததால் மனைவியை கொன்று நாடகமாடிய கட்டிட தொழிலாளி கைது
    X

    பெண் கொலையில் திருப்பம்: கள்ளக்காதலை கைவிடாததால் மனைவியை கொன்று நாடகமாடிய கட்டிட தொழிலாளி கைது

    • சசிகலா நேற்று முன்தினம் மகாலிங்கம் நகர் வீட்டுமனை காலி இடத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • சசிகலாவின் கணவர் ராமன் காரிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே உள்ள குழந்தைசாமி நாடார் நகரை சேர்ந்தவர் ராமன் (வயது 38). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சசிகலா (வயது 31). கணவநமனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களது மகன், மகள் ராமனுடன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வசிக்கின்றனர். சசிகலா மட்டும் தனியாக காரிப்பட்டியில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் சசிகலா நேற்று முன்தினம் காரிப்பட்டி மகாலிங்கம் நகர் வீட்டுமனை காலி இடத்தில் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். காரிப்பட்டி போலீசார், உடலை மீட்டு ரத்தக்கறையுடன் கிடந்த மதுபாட்டிலை கைப்பற்றினர். மேலும் அங்கு பதிவான கைரேகைகளை சேகரித்து கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

    இது தொடர்பாக சசிகலாவின் கணவர் ராமன் காரிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதில், அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் பிரபு என்பவர் மீது சந்தேகம் உள்ளது. அவர் தான் இந்த கொலையை செய்திருக்கலாம் என கூறியிருந்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கட்டிட வேலை செய்து வந்த இடத்தில் ராமனுக்கு, பெயிண்டிங் தொழிலாளி பிரபு (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நண்பர்களாகினர்.

    இந்த பழக்கத்தின் அடிப்படையில் பிரபு, அடிக்கடி ராமன் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது சசிகலாவுடன் பழக்கம் ஏற்பட்டு நாளாடைவில் கள்ளத் தொடர்பாக மாறியது. சசிகலா தனியாக வசித்து வந்த நிலையில் கள்ளக்காதலன் பிரபு அவரை செய்திருக்கலாம் என போலீசார் எண்ணினார்.

    இதனால் போலீசார் சந்தேகத்தின்பேரில், பிரபுவை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அவர் பயன்படுத்தி வந்த செல்போனில் பதிவான அழைப்புகள், உரையாடல்களும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் , மதுபாட்டிலில் பதிவான கைரேகையை, பிரபு கைரேகையுடன் ஒப்பிடும் நடவடிக்கையில் கைரேகை நிபுணர்கள் ஈடுபட்டனர்.

    இந்த ஆய்வில், மது பாட்டிலில் பதிவான கைரேகை, சசிகலாவின் கணவர் ராமனுடைய கைரேகை என்பது உறுதியானது. இதனால் பிரபு, இந்த கொலைைய செய்யவில்லை என போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், ராமனை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதில், சசிகலாவை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல ராமன் கடந்த 11-ந்தேதி இரவு காரிப்பட்டிக்கு வந்தார். அப்போது சசிகலா, பிரபுவை விட்டு பிரியமனமின்றி ராமனுடன் செல்ல மறுத்தார். இதனால் சசிகலாவை கல்லால் தாக்கி, மது பாட்டிலால் குத்தி கொலை செய்து விட்டு, பிரபு மீது புகார் கொடுத்து நாடகமாடியது தெரியவந்தது.

    இந்த கொலைக்கு காரிப்பட்டி கருமாபுரத்தை சேர்ந்த ஹரி (25) என்பவர் உடந்தையாக இருந்துள்ளார். ராமனுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட தெரியாது. இதனால் சம்பவத்தன்று ராமனை தனது மோட்டார் சைக்கிளில் மகாலிங்கம் நகர் வீட்டுமனை பகுதிக்கு ஹரி அழைத்து வந்து உதவியுள்ளார். சசிகலா கொலை செய்து விட்டு, ராமன் அதே மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளார் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து, சசிகலாவின் கணவர் ராமன், கொலைக்கு உதவி செய்த ஹரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயிலில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×