search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டெல்டா மாவட்டங்களில் ஒரே நாளில் 1650 மி.மீ. மழை கொட்டியது
    X

    டெல்டா மாவட்டங்களில் ஒரே நாளில் 1650 மி.மீ. மழை கொட்டியது

    • பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்தது.
    • உப்பு உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் சில நாட்கள் விட்டு விட்டு தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்தது. அதன் பின்னர் மழை இன்றி கோடை காலம் போல் வெயில் சுட்டெரித்து வந்தது. மேலும் காலை நேரங்களில் பனிப்பொழிவும் காணப்பட்டது.

    இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    அதன்படி தஞ்சையில் நேற்று மதியம் கனமழை கொட்டியது. இடைவிடாமல் தொடர்ந்து இரண்டு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. குறிப்பாக ஒரத்தநாட்டில் அதி கனமழை பெய்தது. இங்கு அதிகபட்சமாக 86.10 மி.மீ. மழை கொட்டியது. இதேபோல் பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவையாறு, வெட்டிக்காடு, மதுக்கூர், பேராவூரணி, அதிராம்பட்டினம், பாபநாசம், திருவிடைமருதூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்தது.

    தொடர் மழையால் பாபநாசம் அருகே உள்ள வளத்தாமங்கலம் கிராமத்தில் வசித்து வந்த இளையராஜா மனைவி ராஜேஸ்வரி என்பவரது குடிசை வீடு இடிந்து சேதம் அடைந்தது. இதனை தொடர்ந்து அரசின் உரிய நிவாரணம் வழங்க தாசில்தார் மணிகண்டன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.


    திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, வலங்கைமான், நன்னிலம், குடவாசல், நீடாமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் 5 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. தொடர் மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. மாவட்டத்தில் அதிகபட்சமாக நன்னிலம், குடவாசலில் 50 மி.மீ. மழை கொட்டியது.

    நாகை மாவட்டத்தில் பகல் முழுவதும் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருக்குவளையில் 83 மி.மீ. மழை கொட்டியது. இதேபோல் நாகை, வேளாங்கண்ணி, திருப்பூண்டி , தலைஞாயிறு, வேதாரண்யம், கோடியக்கரையிலும் கனமழை பெய்தது. தொடர் மழையால் மாவட்டத்தில் 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. உப்பு உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து 4 மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கின.

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஒரே நாளில் 1650.48 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு :-

    ஒரத்தநாடு-86.10, திருக்குவளை-83, செம்பனார்கோவில்-62.4, வேளாங்கண்ணி-62, மயிலாடுதுறை-61, பட்டுக்கோட்டை-60,

    திருவிடைமருதூர்-52.80, மதுக்கூர்-52.60, நன்னிலம்-50, திருவாரூர்-30, சீர்காழி-41, தரங்கம்பாடி-29.3, தஞ்சாவூர்-27.20.

    டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா, தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. போதிய காவிரி நீர் இல்லாததால் பயிர்கள் வாடி வந்த நிலையில் தற்போது பெய்த கனமழையால் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இருந்தாலும் தொடர்ந்து சில நாட்கள் மழை பெய்தால் மட்டுமே பயிர்களுக்கு முழுமையான தண்ணீர் கிடைக்கும் எனவும் தெரிவித்தனர்.

    Next Story
    ×