search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.230ஆக உயர்ந்தது- இல்லத்தரசிகள் அதிர்ச்சி
    X

    சென்னையில் சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.230ஆக உயர்ந்தது- இல்லத்தரசிகள் அதிர்ச்சி

    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 50 முதல் 60 டன் சின்ன வெங்காயம் வந்த நிலையில் திடீரென வரத்து குறைந்தது.
    • தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விலை பொதுமக்களை கண்ணீர் வரச் செய்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் அதிகரித்தது. வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து சென்னைக்கு குறைவாகவே வருவதால் விலையேற்றத்து டன் காணப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனைக்கே தக்காளி கிலோ ரூ.100-க்கு இன்று விற்கப்பட்டது. இதனால் காய்கறி கடைகளில் சில்லரை விற்பனை ரூ.130 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது.

    தக்காளி இப்போது அபூர்வ உணவு பொருளாக மாறி விட்டது. வீட்டு சமையல்களில் தக்காளியை பெயர் அளவுக்குதான் பயன்படுத்துகின்றனர். தக்காளியை போல இஞ்சி கிலோ ரூ.300-க்கும், பச்சை மிளகாய் ரூ.200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சமையலில் குறைந்த அளவில் இதன் பயன்பாடு இருந்தாலும் கூட கட்டாயம் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. சில்லரை கடைகளில் பச்சை மிளகாய் 10 ரூபாய்க்கு கேட்டால் 4 அல்லது 5 எண்ணி தருகிறார்கள்.

    இந்த நிலையில் சின்ன வெங்காயம் விலையும் எகிறியது. கடந்த மாதம் ரூ.50-க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் படிப்படியாக ரூ.100 வரை உயர்ந்தது. இன்று கிலோ ரூ.230-க்கு விற்கப்படுகிறது. வரலாறு காணாத அளவிற்கு சின்ன வெங்காயம் விலை உயர்ந்துள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 50 முதல் 60 டன் சின்ன வெங்காயம் வந்த நிலையில் திடீரென வரத்து குறைந்தது. 20 டன் அளவில் சின்ன வெங்காயம் வருவதால் தட்டுப்பாட்டின் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது. சின்ன வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விலை பொதுமக்களை கண்ணீர் வரச் செய்துள்ளது. மற்ற பச்சை காய்கறிகளான கேரட், அவரை, முட்டை கோஸ், கத்திரிக்காய் போன்றவை விலை குறைவாக இருந்த போதிலும் இவற்றின் விலை குறையாமல் தொடர்ந்து நீடித்து வருவதால் பொதுமக்கள் மிக குறைந்த அளவிலேயே வாங்குகின்றனர்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று பச்சை மிளகாய் கிலோ மொத்த விற்பனைக்கு ரூ.60, பீன்ஸ் கிலோ 90-க்கு விற்கப்பட்டது. பச்சை மிளகாய் விலை சற்று குறைந்து உள்ள நிலையில் பீன்ஸ் விலை சில்லரையில் ரூ.120 வரை விற்கப்படுகிறது.

    பொதுமக்கள் அன்றாட பயன்பாட்டிற்கு தேவையான காய்கறிகளின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டதால் கூலி தொழிலாளர்கள், குறைந்த வருவாய் உடையவர்கள் பெரும் சவாலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×