என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சூறாவளி காற்றுடன் பலத்த மழை: கூடலூரில் மரம் விழுந்து வீடு சேதம்
- கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து நீலகிரியில் மழை பெய்து வருகிறது.
- வாகனங்கள் செல்ல முடியாமல் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
குன்னூர்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து நீலகிரியில் மழை பெய்து வருகிறது.
கூடலூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இந்த மழையால் பல இடங்களிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு, தேவா்சோலை பேரூராட்சி, புழம்பட்டி பகுதியை சேர்ந்த பாத்திமா என்பவரது வீட்டின் மீது மரக்கிளை முறிந்து விழுந்தது. இதில் அவரது வீடு முழுவதும் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவா்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வில்லை.
இதேபோல் குன்னூர்-கோத்தகிரி சாலை டாஸ்மாக் குடோன் அருகே மரம் முறிந்து அங்கு நிறுத்தப்பட்ட லாரி மீது விழுந்தது. இதில், லாரியின் முன்பகுதி சேதம் அடைந்தது.
மேலும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பின்பு போக்குவரத்து சீரானது.
இதற்கிடையே தென் மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில், வீடுகளுக்கு அருகில், பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் உள்ள மரங்களின் கிளைகளை வெட்டவும், விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.






