என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த மழை- காட்டாற்று வெள்ளத்தால் கிராமங்கள் துண்டிப்பு
    X

    ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த மழை- காட்டாற்று வெள்ளத்தால் கிராமங்கள் துண்டிப்பு

    • ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று காலையில் அனல் காற்று வீசியது. இதனால் பகல் நேரத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
    • கடம்பூர் மலைப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 மாதமாகவே வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது. அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் பதிவானது.

    இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. பகல் நேரங்களில் அனல் காற்றும் இரவு நேரங்களில் மின்விசிறிகள் இயங்கினாலும் கடும் புழுக்கத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இதற்கிடையே ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாலை நேரங்களில் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக தாளவாடி, பர்கூர் உள்ளிட்ட மலை பகுதிகளில் மழை அதிக அளவில் பெய்து வருகிறது.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று காலையில் அனல் காற்று வீசியது. இதனால் பகல் நேரத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

    இந்நிலையில் மாலை 4 மணி அளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு மழை வருவதுபோல் இருந்தது. பின்னர் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. ஈரோடு மாநகரில் சுமார் 30 நிமிடம் பலத்த மழை பெய்தது.

    இதே போல் கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, தாளவாடி, கொடுமுடி, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, சென்னிமலை, எலந்தக்குட்டை மேடு, பவானிசாகர் அணை பகுதி, குண்டேரிபள்ளம் அணை பகுதி, அம்மாபேட்டை மற்றும் அந்தியூர், பர்கூர், சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    கடம்பூர் மலைப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக பள்ளத்தாக்குகளில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

    சக்கரப்பள்ளம் என்ற பகுதியில் காட்டாற்று வெள்ளம் தரைப்பாலத்தை மூழ்கி சென்றது. இதன் காரணமாக குரும்பூர் உள்பட பல்வேறு மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த பஸ் மற்றும் வாகனங்கள் பாலத்தை கடக்க முடியவில்லை. சுமார் 5 மணி நேரம் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

    பின்னர் தண்ணீர் குறையத் தொடங்கியதும் 5 மணி நேரத்துக்கு பின்பு வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டது.

    பெருந்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள சேனிடோரியம், துடுப்பதி, சீனாபுரம், வாய்க்கால் மேடு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. நேற்று மாலை 3 மணியளவில் தொடங்கிய மழை மாலை 6 மணி வரை கொட்டி தீர்த்தது. பலத்த காற்றின் காரணமாக 3 இடங்களில் மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டது.

    இதேபோல் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பர்கூர்-கர்நாடகா செல்லும் சாலைகள் சேதமடைந்தது. மழையில் சாலைகள் அரித்து காணப்பட்டது. இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    ஈரோடு மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பெய்த மழை அளவுமில்லி மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு-5, கோபிசெட்டிபாளையம்-7.20, பெருந்துறை-60, தாளவாடி-6.40, கொடுமுடி-31, மொடக்குறிச்சி-20, கவுந்தப்பாடி-15.60, சென்னிமலை-5, எலந்தக்குட்டை மேடு-25.20, பவானிசாகர் அணைப்பகுதி-6, குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதி-6, அம்மாபேட்டை-19

    மொத்தம் ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 206.40 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக பெருந்துறையில் 60 மில்லிமீட்டர் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×