என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பசும்பொன் முத்துராமலிங்கதேவர் தங்க கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு
    X

    பசும்பொன் முத்துராமலிங்கதேவர் தங்க கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

    • தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி லாக்கரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
    • கடந்த சில ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் பொருளாளராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் தங்கக் கவசத்தின் காப்பாளராக இருந்தார்.

    மதுரை:

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் சீனிவாசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் மணிமண்டபத்தில் இருக்கும் திருஉருவ சிலைக்கு தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

    குருபூஜையையொட்டி சில நாட்கள் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் பொருத்தப்பட்டு, பின்னர் அந்த கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி லாக்கரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதற்காக அ.தி.மு.க. மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் சார்பில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, கட்சியின் பொருளாளர் பொறுப்பில் அந்த தங்க கவசம் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் பொருளாளராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் தங்கக் கவசத்தின் காப்பாளராக இருந்தார். தற்போது அவர் அ.தி.மு.க.வில் இருந்தும், பொருளாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அதனால் தங்க கவசத்திற்கு அவர் எந்த வகையிலும் உரிமை கோர முடியாது.

    எனவே வருகிற 30-ந்தேதி முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி வங்கி லாக்கரில் உள்ள தங்க கவசத்தை தற்போதைய அ.தி.மு.க. பொருளாளர் சீனிவாசன் வசம் ஒப்படைக்க வங்கி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஏற்கனவே அ.தி.மு.க.வின் சொந்த பொறுப்பில் தங்க கவசம் உள்ளது. அதன்படி அக்கட்சியின் பொருளாளர் சீனிவாசனிடம் தற்போதும் தங்க கவசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    Next Story
    ×