search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பூக்கள்- பழங்கள் வரத்து அதிகரிப்பு
    X

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பூக்கள்- பழங்கள் வரத்து அதிகரிப்பு

    • கோயம்பேடு பூ மார்க்கெட்டில் சாமந்தி பூ ஒரு கிலோ ரூ.240-க்கு விற்கப்படுகிறது.
    • தினசரி 15 முதல் 20 லாரிகளில் மட்டுமே சாத்துக்குடி விற்பனைக்கு வருவது வழக்கம்.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூஜை பொருட்களின் விற்பனை களை கட்டியது.

    பூ மார்கெட்டுக்கு ஆந்திரா மாநிலம் குப்பம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து இன்று ஏறத்தாழ 80 வாகனங்களில் சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்கு குவிந்துள்ளது. வழக்கமாக தினசரி 40 வாகனங்கள் மூலம் மட்டுமே பூ விற்பனைக்கு வரும். இந்த நிலையில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பூக்கள் வரத்து 2 மடங்காக அதிகரித்து உள்ளது.

    கோயம்பேடு பூ மார்க்கெட்டில் சாமந்தி பூ ஒரு கிலோ ரூ.240-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் பன்னீர் ரோஜா ஒரு கிலோ-ரூ.150 முதல் 200வரையிலும், சாக்லேட் ரோஜா ஒரு கிலோ -ரூ.240-க்கும், மல்லி ஒரு கிலோ ரூ.900-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் பூக்கள் விலை மேலும் பல மடங்கு எகிறி உள்ளது.

    மற்ற பூக்கள் விலை விபரம் வருமாறு (கிலோவில்) ஜாதி-ரூ.600, முல்லை-ரூ.700, கனகாம்பரம்-ரூ.1100, அரளி-ரூ.500, சம்பங்கி-ரூ.300. இதேபோல் பழ மார்க்கெட்டுக்கு ஆந்திரா மாநிலத்தில் இருந்து இன்று 60-க்கும் மேற்பட்ட லாரிகளில் சாத்துக்குடி பழங்கள் விற்பனைக்கு குவிந்துள்ளது. தினசரி 15 முதல் 20 லாரிகளில் மட்டுமே சாத்துக்குடி விற்பனைக்கு வருவது வழக்கம்.

    ஆனால் கடந்த 2 நாட்களாக அதன் வரத்து 3 மடங்கு வரை அதிகரித்து உள்ளது. எனினும் எதிர்பார்த்த விற்பனை நடக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் சாத்துக்குடி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ சாத்துக்குடி ரூ.35 முதல் ரூ40-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் இருந்து 4 வகையான ஆப்பிள் பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 10 லாரிகளில் ஏறத்தாழ 150 டன் ஆப்பிள் பழங்கள் விற்பனைக்கு வரும். இதில் தினசரி விற்பனை ஆவது போக மீதமுள்ள ஆப்பிள் பழங்களை வியாபாரிகள் குளிர்சாதன வசதி கொண்ட குடோனில் வைத்து பதப்படுத்தி வைத்து பின்னர் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்வது வழக்கம்.

    தற்போது ஆயுத பூஜை பண்டிகை என்பதால் கடந்த சில நாட்களாக வியாபாரிகள் அதிகளவில் ஆப்பிள் பழங்களை கொள்முதல் செய்து தங்களது குடோனில் கையிருப்பில் வைத்து தற்போது விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இமாச்சல் ஆப்பிள் 25 கிலோ பெட்டி -ரூ.5 ஆயிரத்துக்கும், காஷ்மீர் ஆப்பிள் 14 கிலோ பெட்டி- ரூ.2ஆயிரத்துக்கும், இத்தாலி ராயல்கலா ஆப்பிள் 18 கிலோ பெட்டி- ரூ.3800-க்கும், கின்னூர் ஆப்பிள் 10 கிலோ பெட்டி-ரூ.2200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கர்நாடக மாநிலம் மாலூர், கடலூர் மாவட்டம் பண்ருட்டி, திருப்பத்தூர் அடுத்த ஒடுக்கத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து கொய்யா பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் கொய்யா பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது. மாலூர் கொய்யா 25 கிலோ பெட்டி ரூ.2 ஆயிரம், மற்ற கொய்யா 25 கிலோ பெட்டி ரூ1200-க்கும் விற்கப்படுகிறது.

    இதேபோல் மாதுளை மற்றும் மஞ்சள் வாழைத்தார் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. மாதுளம் பழம் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.180-க்கும், மஞ்சள் வாழைத்தார் ஒன்று ரகத்தை பொறுத்து ரூ.300 முதல் 500 வரை விற்பனை ஆகி வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு தொடங்கி மழை பெய்து வருவதால் வெளிமார்கெட் மற்றும் பல்வேறு பகுதிகளில் தற்காலிக கடைகள் மூலம் பூஜை பொருட்களை விற்பனை செய்து வரும் வியாபாரிகள் மழை தொடருமா என்கிற அச்சத்தின் காரணமாக பெரிதும் கவலை அடைந்து உள்ளனர்.

    Next Story
    ×