search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2 ஆயிரம் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் வடியாததால் மக்கள் கடும் அவதி
    X

    2 ஆயிரம் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் வடியாததால் மக்கள் கடும் அவதி

    • வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம் இன்னும் வடியாமலேயே உள்ளன.
    • மோட்டார்கள் மூலமாக தண்ணீரை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புயல் பாதிப்பால் கொட்டி தீர்த்த கனமழையால் இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியாமலேயே உள்ளது.

    குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் தேங்கிய மழைநீர் இன்றும் முழுமையாக வடியாமல் இருக்கிறது. இதே போன்று சென்னை மாநகராட்சி பகுதியை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட புழல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம் இன்னும் வடியாமலேயே உள்ளன.

    புழல் விளாங்காடுப் பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான அம்பாள்நகர், தர்காஸ், மல்லிமாநகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி இருக்கும் வெள்ளம் இன்னும் முழுமையாக வடியாததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

    விளாங்காடுப்பாக்கம் மல்லிகா கார்டன் அருகே உள்ள நியூஸ்டார் சிட்டி குடியிருப்புகளில் மார்பளவுக்கு தேங்கி நின்ற தண்ணீர் கடந்த 5 நாட்களாக வடிந்தும் தற்போதுதான் முட்டளவுக்கு குறைந்துள்ளது.


    இந்த பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் இது போன்று ஏற்படும் வெள்ளப் பாதிப்பை சரி செய்ய அதிகாரிகள் இனி வரும் காலங்களில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ. சுதர்சனம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆகியோர் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

    இதேபோன்று செங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளிலும் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த பகுதியில் மட்டும் சுமார் 2 ஆயிரம் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம் இன்னும் வடியாமல் தேங்கி நிற்பதால் மக்கள் கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    குடியிருப்பு பகுதிகளில் வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குப்பை கூளங்களும் தேங்க தொடங்கி உள்ளன. எனவே அவைகளை அப்புறப்படுத்தி மோட்டார்கள் மூலமாக தண்ணீரை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    Next Story
    ×