search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரியலூர் பட்டாசு ஆலையில் தீ விபத்து: 7 பேர் பலி- 40-க்கும் மேற்பட்டோர் கதி என்ன?
    X

    அரியலூர் பட்டாசு ஆலையில் தீ விபத்து: 7 பேர் பலி- 40-க்கும் மேற்பட்டோர் கதி என்ன?

    • ஆலையின் முகப்பில் நிறுத்தி வைக்கப்பட்ட 9 இருசக்கர வாகனங்கள், மினி வேன்கள் முற்றிலும் தீயில் கருகி சாம்பலானது.
    • சம்பவ இடத்திற்கு வந்த கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா மீட்பு பணிகளை விரைவுபடுத்த துரித நடவடிக்கைகளை முடுக்கி விட்டார்.

    திருமானூர்:

    தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், தமிழகத்தில் பல பகுதிகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    உரிய பாதுகாப்புடன் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், சில இடங்களில் எதிர்பாராதவிதமாக வெடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

    அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே திருமானூரை சேர்ந்தவர் அருண். இவருக்கு விரகாலூர் கிராமத்தில் சொந்தமாக பட்டாசு ஆலை உள்ளது.

    இந்த ஆலையில் நாட்டு வெடிகள், திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகளுக்கு பயன்படுத்தும் வாணவெடிகள் மற்றும் தீபாவளி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அடுத்த மாதம் (நவம்பர்) தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் இங்கு தீவிரமாக நடந்து வந்தது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

    வழக்கம் போல் இன்று காலை பணிக்கு வந்த தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதில் வெடித்து சிதறிய பட்டாசுகளுக்கிடையே தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனா்.

    அந்த பகுதி முழுவதும் கடுமையான புகை மண்டலம் கிளம்பி பட்டாசு ஆலை முழுவதும் கரும்புகை மூட்டமாக மாறியது. வெடிகுண்டுகள் வெடித்து சிதறியது போல பட்டாசுகளின் சத்தம் விண்ணை பிளக்கும் வகையில் இருந்ததால் சம்பவ இடத்துக்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர்.

    இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த தரங்கம்பாடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர்.

    மேலும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்டவர்களை வீரர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிப்பட்டு வருகிறது. இதில் சிகிச்சை பலனின்றி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் நிலை என்ன என்று தற்போது வரை தெரியவில்லை. தீயை கட்டுக்குள் கொண்டு வந்த பிறகுதான் துள்ளியமாக தெரியவரும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

    மேலும் ஆலையின் முகப்பில் நிறுத்தி வைக்கப்பட்ட 9 இருசக்கர வாகனங்கள், மினி வேன்கள் முற்றிலும் தீயில் கருகி சாம்பலானது.

    சம்பவ இடத்திற்கு வந்த கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா மீட்பு பணிகளை விரைவுபடுத்த துரித நடவடிக்கைகளை முடுக்கி விட்டார்.

    பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருப்பதால், தீயணைப்புத் துறையினரால் தீயை அணைக்க முடியவில்லை. 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இந்த பட்டாசு ஆலையில் கடந்த ஆண்டும் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×