என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தனியார் பள்ளி பஸ் மோதி முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் மகன் பலி- பஸ்சுக்கு தீ வைத்து எரிப்பு
- காயமடைந்த பள்ளி மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் கோவிந்ததராஜை கைது செய்தனர்.
மத்தூர்:
ஊத்தங்கரை அருகே அடுத்தடுத்து 2 மோட்டார் சைக்கிள்கள் மீது தனியார் பள்ளி பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக பள்ளி மாணவர்கள் காயத்துடன் உயிர்தப்பினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைக்கு ஒரு தனியார் பள்ளி பஸ் வந்தது. அப்போது அந்த பஸ்சில் சில மாணவர்கள் இறங்கி வீட்டுக்கு சென்றனர்.
பின்னர் பஸ் அங்குள்ள பணிமனை அருகே வந்தபோது திடீரென்று வண்டியின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
அப்போது சாலையில் சென்ற 2 மோட்டார் சைக்கிள்கள் அடுத்தடுத்து மீது மோதி சாலையின் ஓரம் உள்ள மின் கம்பத்தின் மீது மோதி, அதற்கு அடுத்தப்படியாக இருந்த வீட்டின் சுவர் மோதி நின்றது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தனியார் பள்ளி பஸ்சில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் பலத்த காயங்களுடன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஊத்தங்கரை போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் உயிரிழந்த சதாம் உசேனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காயமடைந்த பள்ளி மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஊத்தங்கரையை அடுத்த மகனூர்ப்பட்டியைச் சேர்ந்த வரதராஜ் மகன் கோவிந்தராஜ் என்பவர் தனியார் பள்ளி பஸ்சின் டிரைவர் ஆவார். இவரின் அலட்சியத்தால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் உயிரிழந்தவர் ஊத்தங்கரை காமராஜர் நகரைச் சேர்ந்த முன்னாள் தி.மு.க. கவுன்சிலரான அப்துல் சலாம் மகன் சதாம் உசேன் (வயது 33) என்பதும் தெரியவந்தது.
அதிர்ஷ்டவசமாக பஸ் கட்டுப்பாட்டை இழந்தபோது எதிரே கனரக வாகனங்கள் ஏதும் வராததால், பெரிய விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. மேலும், வண்டியில் இருந்த பள்ளி குழந்தை அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் கோவிந்ததராஜை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து விபத்துக்குள்ளான தனியார் பள்ளி பஸ்சை சம்பவ இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி போலீசார் ஊத்தங்கரை போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தி இருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலையில் அங்கு வந்த மர்ம நபர்கள் பஸ்சுக்கு தீ வைத்து தப்பி ஓடிவிட்டனர். அப்போது தீ பஸ் முழுவதும் பற்றி எரிந்து நாசமானாது.
இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதால், தனியார் பள்ளி மற்றும் ஊத்தங்கரை பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






