search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. கொடியை ஓ.பி.எஸ். பயன்படுத்துவதை தடுக்க கோர்ட்டு மூலம் நடவடிக்கை
    X

    அ.தி.மு.க. கொடியை ஓ.பி.எஸ். பயன்படுத்துவதை தடுக்க கோர்ட்டு மூலம் நடவடிக்கை

    • ஓ.பி.எஸ். நடத்தும் மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் அதற்குள் தடைவாங்க முடியுமா? என்பது சந்தேகம் தான்.
    • ஓ.பி.எஸ். அணியினர் அ.தி.மு.க. கொடியை நிரந்தரமாக பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் முறையிட முடிவு செய்துள்ளோம் என்று அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் அதனை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து தனது செல்வாக்கு என்ன? என்பதை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தள்ளப்பட்டுள்ளார்.

    இதற்காக திருச்சியில் வருகிற 24-ந்தேதி ஆதரவாளர்களை திரட்டி பிரமாண்டமான முறையில் மாநாட்டை நடத்த ஓ.பி.எஸ். முடிவு செய்துள்ளார். இந்த மாநாட்டுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஆதரவாளர்களை திரட்ட ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தயாராகி வருகிறார்கள்.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தன்னை அ.தி. மு.க. ஒருங்கிணைப் பாளர் என்று கூறிக்கொண்டே செய்தி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். திருச்சி மாநாட்டிலும் அ.தி.மு.க. பெயர் மற்றும் கொடியை பயன்படுத்த அவர் முடிவு செய்துள்ளார்.

    இதனை தடுத்து நிறுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக அதிரடி காட்ட தயாராகி வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க. கொடியையோ, பெயரையோ பயன்படுத்தக் கூடாது என்று கோர்ட்டில் வழக்கு தொடர எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.

    ஓ.பி.எஸ். நடத்தும் மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் அதற்குள் தடைவாங்க முடியுமா? என்பது சந்தேகம் தான். ஒருவேளை அதற்குள் தடை கிடைக்காவிட்டால் அடுத்தகட்டமாக ஓ.பி.எஸ். அணியினர் அ.தி.மு.க. கொடியை நிரந்தரமாக பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் முறையிட முடிவு செய்துள்ளோம் என்று அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    இதையெல்லாம் மீறி மாநாட்டில் அ.தி.மு.க. கொடியை ஓ.பி.எஸ். பயன் படுத்தினால் போலீசில் புகார் அளிக்கவும் முடிவு செய்திருப்பதாக அ.தி.மு.க.வினர் தெரிவித்தனர்.

    அ.தி.மு.க. கொடியையோ, பெயரையோ ஓ.பி.எஸ். பயன்படுத்தக்கூடாது என்கிற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று தடை விதிக்கப்படவே 100 சதவீதம் வாய்ப்பு உள்ளது என்று அ.தி.மு.க. மூத்த வக்கீல் ஒருவர் கூறினார். ஒருவேளை அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விட்டால் ஓ.பி.எஸ்.சின் அரசியல் எதிர்காலம் என்ன? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக மாறி இருக்கிறது.

    எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி மாநாட்டில் ஓ.பி.எஸ். எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×