search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரையில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டு திடலை எடப்பாடி பழனிசாமி ஆய்வு
    X

    மதுரையில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டு திடலை எடப்பாடி பழனிசாமி ஆய்வு

    • மாநாட்டில் அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக கலந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
    • முன்னாள் அமைச்சர்களிடம் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

    மதுரை:

    மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டுப் பணிகளை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மதுரை ரிங் ரோடு வலையங்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    மாநாட்டில் அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக கலந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதற்கேற்ப சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றவாறு பந்தல் அமைக்கப்படுகிறது.

    வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் இருந்து வாகனங்களை நிறுத்துவதற்கு தனித்தனியாக விரிவான பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் முக்கிய பணிகள் இரவு, பகலாக நடைபெற்று வருகின்றன. இதற்காக பணியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் மாநாட்டு திடலில் முகாமிட்டு பணிகளை முடுக்கி விட்டு வருகிறார்கள்.

    வருகிற 16-ந்தேதிக்குள் மாநாட்டு பணிகள் அனைத்தும் நிறைவடைய உள்ள நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை திடீரென மாநாடு நடைபெறும் வலையங்குளம் பகுதிக்கு வந்தார்.

    இதற்காக இன்று அதிகாலை சேலத்தில் இருந்து காரில் புறப்பட்ட அவர் மாநாட்டு திடலுக்கு வருகை தந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அ.தி.மு.க.வினர் வந்தனர். மாநாட்டு திடலுக்கு எடப்பாடி பழனிசாமி வந்ததும் அவரை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், கே.டி.ராஜேந்திர பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., ஐ.டி. பிரிவு ராஜ் சத்யன் உள்ளிட்டோர் வரவேற்றனர் .

    இதைத்தொடர்ந்து அங்கு முன்னாள் அமைச்சர்களிடம் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். அப்போது மாநாட்டில் மேடை மற்றும் பந்தல் அமைப்பு, பார்க்கிங் வசதி, சமையல் கூடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வது தொடர்பான வரைபடத்தை முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்தனர்.

    அப்போது அவரும் அதை பார்த்து மாநாட்டு பந்தல் மற்றும் சமையல் கூடங்கள் அமைய உள்ள பகுதிகளை சுற்றிப் பார்த்தார். மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

    வாகனங்கள் நிறுத்துமிடங்களில் கூடுதலாக வாகனங்களை நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யவும், மாநாட்டுக்கு வருபவர்கள் நெரிசலில்லாமல் செல்லவும் பொது மக்களுக்கு இடையூறு இன்றி வாகனங்களை நிறுத்தவும் ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

    சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மாநாட்டு திடலில் இருந்த எடப்பாடி பழனிசாமி கப்பலூர் பகுதிக்கு சென்று காலை உணவு அருந்திய பின்னர் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    Next Story
    ×