என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜெயலலிதா பெயரை இருட்டடிப்பு செய்யும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தை கண்டித்து போராட்டம்- எடப்பாடி பழனிசாமி அறிக்கை
- கடந்த சில நாட்களாக ஜெயலலிதா பெயரை இருட்டடிப்பு செய்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.
- தமிழக அரசு சூட்டிய பெயரை மெட்ரோ ரெயில் நிர்வாகம் முழுமையாக அறிவிப்பு செய்வதில்லை.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஜெயலலிதா 2011-ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சென்னை மெட்ரோ ரெயில் லிட்.,-கட்டம் 1-ன் பணிகளை விரைவாக நடத்தி முடிக்க ஆணையிட்டார். அதன்படி, மெட்ரோ ரெயில் பணிகள் குறித்த காலத்தில் நடைபெற்று வந்தது. மேலும், வட சென்னை மக்களின் கோரிக்கையினை ஏற்று, திருவொற்றியூர், விம்கோ நகர் வரையிலான விரிவாக்கத் திட்டத்திற்கு ஜெயலலிதா 23.7.2016 அன்று அடிக்கல் நாட்டினார்.
* 21.9.2016 அன்று சென்னை விமான நிலையம்- லிட்டில் மவுண்ட் வரையான முதல் மெட்ரோ போக்குவரத்தினை, மாண்புமிகு அம்மா அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
* 14.5.2017 அன்று திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான மெட்ரோ ரெயில் போக்குவரத்தை எனது முன்னிலையில், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
* 25.5.2018 அன்று நேரு பூங்கா முதல் சென்னை சென்ட்ரல் வரையும், மற்றும் சைதாப்பேட்டை முதல் ஏஜி-டி.எம்.எஸ். வரையான மெட்ரோ ரெயில் போக்குவரத்தை துவக்கி வைத்தேன்.
* 10.2.2019 அன்று ஏஜி-டி.எம்.எஸ். முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரெயில் போக்குவரத்தை துவக்கி வைத்தேன். இத்துடன் சென்னை மெட்ரோ ரெயில் கட்டம் 1-ன், ரூ.18,380 கோடி மதிப்பீட்டில் 45.1 கி.மீ. நீளத்திலான பணிகள் முடிவடைந்தன.
* திருவொற்றியூர்-விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரெயில் கட்டம்-1-ன் நீட்டிப்பு வழித் தடத்தினை 14.2.2021 அன்று எனது முன்னிலையில் பிரதமர் தொடங்கி வைத்தார். இதன்படி, 3,770 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 9.051 கிலோ மீட்டர் நீட்டிப்பு பணிகள் முழுமையடைந்து மெட்ரோ ரெயில் கட்டம்-1 மக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக வந்தது.
* 21.11.2020 அன்று மத்திய உள்துறை மந்திரி எனது முன்னிலையில், சென்னை மாநகரின் புறநகர் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக, 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.90 கி.மீ. நீளத்திலான சென்னை மெட்ரோ ரெயில் கட்டம்-2 திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
இவ்வாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனப்பணிகள், அ.தி.மு.க.வின் அம்மா ஆட்சியிலும், தொடர்ந்து எனது தலைமையிலான அம்மாவின் அரசிலும் விரைவுபடுத்தப்பட்டு, குறித்த காலத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது என்றால் அது மிகையல்ல.
ஆனால், இந்நிறுவனம் கடந்த சில நாட்களாக ஜெயலலிதா பெயரை இருட்டடிப்பு செய்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் இறங்குவதற்கு வசதியாக, ஒவ்வொரு நிறுத்தம் வருவதற்கு முன்பும், அந்நிறுத்தத்தின் பெயரை அறிவிப்பு செய்வது வழக்கம். சென்ற வாரம் வரை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ நிறுத்தம் வரும் போது தமிழக அரசு சூட்டிய "புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்" என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அந்த நிறுத்தத்தின் பெயரை முழுமையாக அறிவிப்பு செய்து வந்தது.
ஆனால், கடந்த சில நாட்களாக மெட்ரோ ரெயில் நிர்வாகம், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ நிறுத்தம் வரும்போது, "புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்" என்று அறிவிப்பு செய்யாமல்,
"புறநகர் பேருந்து நிறுத்தம்" என்று மட்டுமே அறிவிப்பு செய்கிறது. தமிழக அரசு சூட்டிய பெயரை மெட்ரோ ரெயில் நிர்வாகம் முழுமையாக அறிவிப்பு செய்வதில்லை. ஜெயலலிதாவின் பெயரை இருட்டடிப்பு செய்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, உடனடியாக கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய நிறுத்தம் வரும்பொழுது, ஏற்கெனவே அறிவிப்பு செய்து வந்தபடி "புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்" என்று முழுமையாக அறிவிப்பு செய்ய வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தையும், தி.மு.க. அரசையும் வலியுறுத்துகிறேன். அவ்வாறு செய்யாமல், தொடர்ந்து ஜெயலலிதாவின் பெயரை இருட்டடிப்பு செய்ய நினைத்தால், அ.தி.மு.க.வின் சார்பில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






