என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காலத்திற்கு ஏற்ப தேர்தல் பணியாற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
    X

    காலத்திற்கு ஏற்ப தேர்தல் பணியாற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

    • தேர்தல் வரும்போது கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடுவார்கள். கவர்ச்சிகரமாக பேசுவார்கள்.
    • பேசி பேசி மக்களை மயக்கி ஆட்சிக்கு வந்தது தான் தி.மு.க. இதை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    ஒரு கட்டிடம் வலுவாக இருக்க வேண்டும் என்றால் அதன் அஸ்திவாரம் வலுவாக இருக்க வேண்டும். அதுபோல ஒரு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று சொன்னால் இந்த பூத் அமைப்பு வலிமையாக இருக்க வேண்டும். அப்படி வலிமையாக இருந்தால்தான் நாம் நிறுத்தும் வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும்.

    பூத் கமிட்டி அமைப்பு என்பது தேர்தல் நேரத்தில் நமது வாக்காளர்களை அழைத்து வருவது, தேர்தல் நடக்கின்ற இடத்தில் பூத் ஏஜெண்டாக அமர்ந்து கள்ள ஓட்டு போடுவதை தடுப்பது, அதோடு புதிய வாக்காளரை சேர்ப்பது ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    மகளிர் அணியை சேர்ந்தவர்கள் அந்த பூத்துக்கு உள்பட்ட பகுதியில் வாக்காளர்களை சந்தித்து அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள், அதனால் மக்கள் பெற்ற பலன்கள், நன்மைகளை எடுத்து சொல்ல வேண்டும். அது நமது வேட்பாளருக்கு ஆதரவாக இருக்கும்.

    மேலும் 2½ ஆண்டுகால தி.மு.க. ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். எனவே காலத்திற்கு ஏற்ப தேர்தல் பணியாற்ற வேண்டும். தேர்தல் பணிகளை உடனே தொடங்குங்கள்.

    இப்போது முதலமைச்சர் பேசும்போது, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 95 சதவீதம் அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஒரு பச்சை பொய்யை கூறுகிறார்.

    இதை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். திராவிட மாடல் ஆட்சி என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிற தி.மு.க. ஆட்சியில் எந்தெந்த திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்ற புள்ளி விவரத்தோடு நீங்கள் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். இது பூத் கமிட்டியின் பொறுப்பு.

    தேர்தல் வரும்போது கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடுவார்கள். கவர்ச்சிகரமாக பேசுவார்கள். பேசி பேசி மக்களை மயக்கி ஆட்சிக்கு வந்தது தான் தி.மு.க. இதை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றினோம். கொடுக்கப்படாத மக்கள் சார்ந்த நன்மைகள் கொண்ட திட்டத்தையும் அறிவித்தோம். இதுதான் அ.தி.மு.க.வின் சாதனைகள்.

    அ.தி.மு.க. ஆட்சியில் மிக்சி, கிரைண்டர் என மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டது. ஆனால் தி.மு.க. அரசு 10 சதவீத வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தான் அதிகமான கல்லூரிகள் திறக்கப்பட்டன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×