என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சூறாவளி சுற்றுப்பயணத்துக்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி
- பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் சுணக்கம் காட்டக்கூடாது. சுணக்கம் காட்டுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- 2024-ம் ஆண்டிற்கான பாராளுமன்ற தோ்தல் பணியில் தீவிரம் காட்ட வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பூத் கமிட்டி, இளைஞா் பாசறை, இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிா் அமைப்புகளின் களப்பணி குறித்த மாவட்டப் பொறுப்பாளா்கள், மாவட்டச் செயலா்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தாா். அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன், மூத்த நிா்வாகிகள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, டி.ஜெயக்குமாா், ஓ.எஸ்.மணியன் உள்பட மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.
சுமாா் ஒரு மணி நேரம் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலா்களிடம் பூத் கமிட்டி அமைக்கும் பணி தொடா்பாக எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தாா். ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும், பொறுப்பாளா்களும் அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி நிலவரம் குறித்து எடுத்துக் கூறினா்.
அதைத் தொடா்ந்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் சுணக்கம் காட்டக்கூடாது. சுணக்கம் காட்டுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை டிசம்பர் 3-ந்தேதி முடித்துவிட வேண்டும். அதன்பிறகு 2024-ம் ஆண்டிற்கான பாராளுமன்ற தோ்தல் பணியில் தீவிரம் காட்ட வேண்டும்.
சிறுபான்மையினா் பிரச்சனைகளுக்கு மாவட்டச் செயலாளர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சிறுபான்மையினா் பங்களிப்பையும் கட்சியில் அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
எப்போதுமே கட்சிக்கு நேர்மையாக உழைப்பவர்களுக்கு உயர்வு நிச்சயம். அதே நேரத்தில் துரோகம் செய்தவர்கள் எப்படி இருக்கிறார்கள் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவர்களால் அ.தி.மு.க. கரை வேட்டியை கூட கட்ட முடியவில்லை.
சிறுபான்மையினர் நம்மை தேடி வருவதை பார்த்து தி.மு.க.வுக்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான் பாரதிய ஜனதா கூட்டணியில் நாம் மறைமுகமாக இருப்பதாக பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.
எனவே பாரதிய ஜனதா கூட்டணியில் அ.தி.மு.க. இல்லை என்பதை மக்களிடம் தெள்ளத்தெளிவாக எடுத்துக் கூறுங்கள். சிறுபான்மையினரை கவரும் வகையில் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள். கட்சியிலும் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் அளித்து மாவட்ட செயலாளர்கள் செயல்பட வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அனைவரும் பணியாற்றுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாராளுமன்ற தோ்தல் நெருங்க உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்வது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஜனவரி முதல் சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்க உள்ளாா் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.
சில அ.தி.மு.க. தலைவர்கள் கூறுகையில், "எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதம் (டிசம்பர்) தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார்" என்றனர்.
இதற்கிடையே தமிழகம் முழுவதும் சிறுபான்மையினர் வாக்குகளை முன்பு போல கணிசமான அளவுக்கு பெற வேண்டும் என்பதில் அ.தி.மு.க. தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். இதை கருத்தில் கொண்டுதான் பாரதிய ஜனதாவுடன் உள்ள உறவை அ.தி.மு.க. துண்டித்தது. 6 ஆண்டுகள் பா.ஜ.க.வுடன் உறவில் இருந்த போது அ.தி.மு.க. வசம் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போய் விட்டது.
அந்த சிறுபான்மையினர் வாக்குகளை மீண்டும் பெறும் வகையில் தற்போது அ.தி.மு.க.வில் புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளன. அதன் முதல் கட்டமாக முஸ்லிம் அமைப்புகளுக்கு அ.தி.மு.க. அழைப்பு விடுத்தது. அதன் பேரில் இஸ்லாமிய தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். அ.தி.மு.க.வுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
அடுத்த கட்டமாக விரைவில் இஸ்லாமிய அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து மிக பிரமாண்டமான மாநாடு ஒன்றை நடத்த உள்ளன. அந்த மாநாட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமியை பங்கேற்க செய்யும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.
அப்போது இஸ்லாமியர்களுக்கு சாதகமான பல்வேறு அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. இயங்கிய போது அந்த கட்சி மீது இஸ்லாமியர்கள் எந்த அளவுக்கு பாசத்துடன் இருந்தார்களோ அதே பாசத்தை மீண்டும் பெறும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புகள் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அடுத்த கட்டமாக கிறிஸ்தவ அமைப்புகளையும் அ.தி.மு.க. பக்கம் கொண்டு வரும் முயற்சிகள் திரைமறைவில் ரகசியமாக நடந்து வருகின்றன. அ.தி.மு.க. தலைமைக் கழக செயலாளர் எஸ்.பி.வேலுமணி முயற்சியில் கிறிஸ்தவ தலைவர்கள் பலர் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட முன் வந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவராக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி வருகிறார்கள்.
நேற்று தமிழ்நாடு ஐக்கிய கிறிஸ்தவ கழகத்தின் சார்பில் கிறிஸ்தவர்கள் திரண்டு சென்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம், "வருகிற 28-ந் தேதி கருமத்தம்பட்டியில் நடைபெற உள்ள கிறிஸ்தவர்கள் உரிமை மீட்டெடுப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வரவேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.
கிறிஸ்தவர்களின் இந்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார். பாரதிய ஜனதாவிடம் இருந்து பிரிந்த பிறகு எடப்பாடி பழனிசாமியை கிறிஸ்தவர்கள் சந்தித்து பேசி இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து மேலும் சில கிறிஸ்தவ அமைப்புகள் வரும் நாட்களில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளன. குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்புகள் அ.தி.மு.க.வுடன் நெருங்கி வர தொடங்கி உள்ளன.
எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் தொடங்குவதற்கு முன்பு கணிசமான அளவுக்கு இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகளை சந்தித்து ஆதரவை பெற்று விடுவார் என்று கூறப்படுகிறது.






