search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம், விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு
    X

    தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம், விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு

    • அக்டோபர் 2-ம் தேதி அன்று சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு.
    • ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி அளித்திருந்த நிலையில் காவல்துறை அனுமதி மறுப்பு.

    தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தனர். 75-வது சுதந்திர தினவிழா, அம்பேத்கர் பிறந்த தின நூற்றாண்டு விழா, விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு இந்த ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதற்காக சென்னை, திருவள்ளூர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் காவல் துறையிடம் அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் முறைப்படி அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால் இதற்கு காவல்துறை சார்பில் அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.

    இதைதொடர்ந்து அந்த அமைப்பை சேர்ந்த 9 பேர் இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பது சட்டவிரோதம் என்றும், எனவே உரிய அனுமதி அளிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டு கொள்ளப்பட்டிருந்தது. இதனை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த 22-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர் வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இதை தொடர்ந்து செப்டம்பர் 28-ந் தேதிக்குள் முடிவு எடுத்து நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து அக்டோபர் 2-ந்தேதி திட்டமிட்டபடி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அந்த அமைப்பினர் மேற்கொண்டு வந்தனர்.

    இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்துவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. இதன் பின்னரும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு எதிரான குரல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன. இதற்கிடையே ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இதே நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மத நல்லிணக்க பேரணியை நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    இந்தநிலையில் அக்டோபர் 2-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு காவல் துறை சார்பில் பல மாவட்டங்களில் அனுமதி மறுத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருச்சி, வேலூர், ராமநாதபுரம், தென்காசி, திருவள்ளூர், திண்டுக்கல், கடலூர் உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

    சென்னையிலும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளை அந்த அமைப்பினர் மேற்கொண்டு வந்தனர். சென்னையிலும் ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று தற்போதுதான் இயல்புநிலை திரும்பியுள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டிருந்த அதே நாளில் வேறு சில அமைப்புகளும் பேரணிக்கு அனுமதி கேட்டுள்ளன.

    இரு தரப்புக்கு ஒரே நாளில் அனுமதி அளித்தால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

    Next Story
    ×