search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    மெரினா கடற்கரையில் செத்து கரை ஒதுங்கிய மீன்கள்
    X

    மெரினா கடற்கரையில் செத்து கரை ஒதுங்கிய மீன்கள்

    • கடல்நீரில் குளிர்ச்சியான மற்றும் வெப்பமான நீர் கலக்கும் போது அதன் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படுகிறது.
    • அளவுக்கு அதிகமாக மழைநீர் கடலில் கலக்கும் போது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை மாற்றுதிறனாளிகள் அலுவலகம் எதிரே உள்ள கரையோரம் நேற்று முன்தினம் ஏராளமான மீன்கள் செத்து கரை ஒதுங்கின. இதனால் அந்த பகுதி முழுவதும் பயங்கர துர்நாற்றம் வீசியது. துர்நாற்றத்தால் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மீன்வளத்துறை அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்களின் உதவியுடன் மீன்களை அப்புறப்படுத்தினர். மேலும் மீன்களின் இறப்புக்கான காரணங்களை ஆராய்வதற்கு செத்து போன மீன்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

    சம்பவம் குறித்து மீன்வளத்துறை அதிகாரி கூறும்போது, சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழைநீர், வடிகால் வழியாக அடையாற்றில் கலந்து, பின்னர் கடலின் முகத்துவாரத்தில் கலக்கிறது. இதனால் கடல்நீரின் ஆக்சிஜன் அளவு குறையும்.

    கடல்நீரில் குளிர்ச்சியான மற்றும் வெப்பமான நீர் கலக்கும் போது அதன் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் தான் மீன்கள் இறக்கும் நிலை ஏற்படுகிறது. அளவுக்கு அதிகமாக மழைநீர் கடலில் கலக்கும் போது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. மேலும் மீன்கள் இறப்புக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என ஆய்வு செய்ய செத்துபோன மீன்களை சேகரித்துள்ளோம் என அவர் கூறினார்.

    மேலும் இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, அடையாற்றின் கரை ஓரங்களில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக அடையாற்றில் கலக்கிறது. மழைநீர் கால்வாயில் உள்ள கழுவுநீரும் அடையாற்றில் கலப்பதால் மீன்கள் சுவாசிக்க சிரமம் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அடையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    Next Story
    ×