என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாடகமேடையில் கல்வி பயிலும் குழந்தைகளை படத்தில் காணலாம்.
வடமதுரை அருகே கட்டிட வசதி இல்லாததால் நாடக மேடையில் கல்வி பயிலும் குழந்தைகள்
- பள்ளியில் கட்டிட வசதி இல்லாததால் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
- பள்ளியில் கட்டிட பணி தொடங்கப்படாமல் உள்ளது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கொம்பேறிப்பட்டி மலை கிராமப் பகுதியான செம்மணாம் பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை பல்வேறு கிராமங்களில் இருந்து குழந்தைகள் கல்வி பயில வருகின்றனர்.
இப்பள்ளியில் சுமார் 70 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு மற்ற தனியார் பள்ளிகள் எதுவும் இல்லாததாலும், பெரும்பாலும் விவசாய கூலித் தொழிலாளர்களே உள்ளதாலும் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளிக்கே ஆரம்ப கல்விக்காக அனுப்பி வந்தனர்.
ஆனால் பள்ளியில் கட்டிட வசதி இல்லாததால் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்காலிக ஏற்பாடாக அங்குள்ள கலையரங்கத்தில் பாடம் சொல்லிக் கொடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக அதே கலையரங்கில் கடந்த சில மாதங்களாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
ஆனால் பள்ளியில் கட்டிட பணி தொடங்கப்படாமல் உள்ளது. தற்போது கன மழை பெய்து வரும் சமயங்களில் கூட மாணவர்கள் வகுப்பறை வசதியின்றி திறந்தவெளி கலையரங்கில் கல்வி பயின்று வருகின்றனர். இதனால் அந்த குழந்தைகளுக்கு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
சுகாதாரமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி இல்லாமல் உள்ளது. எனவே மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் கலெக்டர் இப்பிரச்சினையில் தலையிட்டு பள்ளி கட்டிடத்தை விரைந்து சீரமைக்கவும் மாணவர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் கல்வி பயில நடவடிக்கை எடுக்கவும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






