search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 16-ந்தேதி டெல்லி பயணம்: பிரதமர் மோடியை சந்தித்து மனு
    X

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 16-ந்தேதி டெல்லி பயணம்: பிரதமர் மோடியை சந்தித்து மனு

    • தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார்.
    • மசோதாக்கள் மீது விரைந்து முடிவெடுக்க அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி சென்று ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார்.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 28-ந்தேதி முதல் இந்த மாதம் 10-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியை மிகச்சிறப்பாக நடத்தி முடித்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார்.

    இதற்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருந்தோம்பலும், சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரண்டு பண்புகள் ஆகும். தொடர்ச்சியாக உங்களது ஆதரவையும் இது போன்ற இன்னும் பல உலக அளவிலான போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே இப்போது அரசாங்க பணிகளில் இணைக்கமான சூழல் உருவாகி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த சூழலில் வருகிற 16-ந்தேதி (நாளை மறுநாள்) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக பிரதமர் அலுவலகத்தில் நேரம் ஒதுக்கி தருமாறு கேட்கப்பட்டுள்ளது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பித்ததற்கு நேரில் நன்றி தெரிவிப்பதுடன், தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி அளித்து கூடுதல் நிதி ஒதுக்குமாறு விரிவான மனு கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்.

    தமிழகத்திற்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வார்.

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். அந்த மசோதாக்கள் மீது விரைந்து முடிவெடுக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் ஆகியோரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணத் திட்டம் விரிவாக தயார் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான முறையான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×