search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சதுரகிரி மலை ஏற பக்தர்களுக்கு தடை
    X

    சதுரகிரி மலை ஏற பக்தர்களுக்கு தடை

    • சங்கிலிபாறை, பிலாவடி கருப்பசாமி கோவில் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • பக்தர்கள் அடிவார நுழைவு வாயிலில் சூடம் ஏற்றி சாமி கும்பிட்டு சென்றனர்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பிரசித்தி பெற்ற சுந்தர சந்தன மகாலிங்க கோவில் உள்ளது. சித்தர்கள் வழிபட்டதாக கூறப்படும் இக்கோவிலுக்கு செல்ல மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி பகுதியில் மழை பெய்யும் சூழல் இருந்தது. இதன் காரணமாக கார்த்திகை மாத அமாவாசைக்கு பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சதுரகிரி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மலை பகுதியில் எலும்போடை, மாங்கனியோடை, சங்கிலிபாறை, பிலாவடி கருப்பசாமி கோவில் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    மேலும் சில இடங்களில் திடீர் காட்டாற்று வெள்ளமும் உருவானது. தடையை அறியாத வெளிமாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் அமாவாசையான இன்று அதிகாலை அடிவாரத்தில் குவிந்தனர்.

    அப்போது அங்கிருந்த வனத்துறை போலீசார் மழை பெய்வதால் மலையேற அனுமதியில்லை என தெரிவித்தனர். இதனால் ஏமாற்றமடைந்த பக்தர்கள் அடிவார நுழைவு வாயிலில் சூடம் ஏற்றி சாமி கும்பிட்டு சென்றனர். சிலர் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியதையும் காண முடிந்தது.

    Next Story
    ×