search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கார் விற்பனை செய்வதாக கூறி திருப்பூர் பெண்ணிடம் ரூ.24 லட்சம் மோசடி- 2 பேர் கைது
    X

    கார் விற்பனை செய்வதாக கூறி திருப்பூர் பெண்ணிடம் ரூ.24 லட்சம் மோசடி- 2 பேர் கைது

    • சம்பந்தப்பட்ட நபர் கூறிய வங்கிக்கணக்குக்கு சிறிது, சிறிதாக ரூ.24 லட்சத்தை செலுத்தியுள்ளார்.
    • சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் கருவலூரை சேர்ந்த 32 வயது பெண், தனது கணவருடன் சேர்ந்து கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் அந்த பெண்ணின் கணவரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில் கார்கள் விற்பனை செய்வதாக பல கார்களின் புகைப்படங்களை நபர் ஒருவர் அனுப்பி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து அந்த பெண், கார்களின் விலை விவரங்களை கேட்டறிந்தார். ரூ.24 லட்சம் செலுத்தினால் சொகுசு கார் வாங்கிக்கொள்ளலாம் என்று அந்த நபர் தெரிவித்துள்ளார். இதை நம்பிய அந்த பெண், சம்பந்தப்பட்ட நபர் கூறிய வங்கிக்கணக்குக்கு சிறிது, சிறிதாக ரூ.24 லட்சத்தை செலுத்தியுள்ளார்.

    அதன்பிறகு சம்பந்தப்பட்ட நபரின் செல்போனில் தொடர்பு கொண்டு காரை டெலிவரி கொடுக்குமாறு அந்த பெண் கேட்டுள்ளார். ஆனால் அந்த நபர் செல்போனை எடுக்காமல் இருந்தார். ஒரு கட்டத்தில் அந்த நபர் தொடர்பு கொண்ட செல்போன் எண்கள் அனைத்தும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டது. அதன்பிறகே தான் ஏமாறியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். புகாரில் கொடுக்கப்பட்ட செல்போன் எண்களை வைத்து போலீசார் துப்பு துலக்கினர்.

    இந்தநிலையில் இந்த மோசடி சம்பவம் தொடர்பாக ஈரோடு நேதாஜி ரோடு பகுதியை சேர்ந்த அப்துல் குத்ஜான் (வயது 42) மற்றும் ஈரோடு பெரிய அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த தர்வேஷ் (51) ஆகியோரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில், அப்துல் குத்ஜான் இதேபோன்று கார் விற்பனை செய்வதாக கூறி பலரிடம் ஏமாற்றி குற்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்தது. தர்வேஷ் தனது வங்கிக்கணக்கை கொடுத்து உதவி செய்துள்ளார்.

    Next Story
    ×