என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆம்னி பஸ் மீது பைக் மோதல்- டீசல் டேங்க் வெடித்து போலீஸ் ஏட்டு உடல் கருகி பலி
    X

    ஆம்னி பஸ் மீது பைக் மோதல்- டீசல் டேங்க் வெடித்து போலீஸ் ஏட்டு உடல் கருகி பலி

    • பஸ்சில் முன்சக்கர டயருக்கு அடியில் சிக்கிய ராமகிருஷ்ணன் சுமார் 500 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டார்.
    • எஸ்.பி. பிரவின் உமேஷ் டோங்கரே சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் கம்பம் மாலையம்மாள் புரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (42). இவர் சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி கவிதா (33) என்ற மனைவியும், ஒரு மகளும், இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

    நேற்று இரவு பணிமுடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். சின்னமனூர்-உத்தமபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் துர்க்கை அம்மன் கோவில் அருகே செல்லும் போது கம்பத்தில் இருந்து பெங்களூர் நோக்கி ஒரு ஆம்னிபஸ் வந்து கொண்டிருந்தது. திடீரென ராமகிருஷ்ணன் ஓட்டி வந்த பைக் மீது ஆம்னிபஸ் மோதியது. பஸ்சில் முன்சக்கர டயருக்கு அடியில் சிக்கிய ராமகிருஷ்ணன் சுமார் 500 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டார்.

    அப்போது பஸ்சில் பிரேக் பிடிக்காததால் உராய்வு ஏற்பட்டு டீசல் டேங்க் வெடித்தது. இதனால் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைப்பார்த்ததும் டிரைவர் பஸ்சை உடனடியாக நிறுத்தினார். பயணிகள் அனைவரும் கூக்குரலிட்டபடி பஸ்சை விட்டு இறங்கினர். இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து சின்னமனூர் மற்றும் உத்தமபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை பரவவிடாமல் அணைத்தனர். அதன் பிறகு பஸ்சுக்கு அடியில் உடல் கருகிய நிலையில் இருந்த ஏட்டு ராமகிருஷ்ணன் உடலை வெளியே கொண்டு வந்தனர். பின்னர் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்.பி. பிரவின் உமேஷ் டோங்கரே சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் ராமகிருஷ்ணன் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×