search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அந்தியூர் பகுதியில் அடுத்தடுத்து 6 கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
    X

    அந்தியூர் பகுதியில் அடுத்தடுத்து 6 கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

    • கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பணத்தை திருடுவது பதிவாகியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பருவாச்சியில் உள்ள ஒரு மளிகை கடையில் நேற்று முன்தினம் இரவு உரிமையாளர் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார்.

    இன்று காலை மீண்டும் கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்தா பணம் திருட்டு போயிருந்தது.

    இதேபோல் அந்தியூர் அடுத்த அண்ணா மடவு பகுதியில் உள்ள ஒரு மளிகை கடை, எலக்ட்ரானிக் கடை, ஜெராக்ஸ் கடை என 4 கடைகளில் இன்று காலை அந்தந்த உரிமையாளர்கள் கடையை திறக்க சென்ற போது கடையின் கதவு போட்டு உடைக்கப்பட்டு உள்ளே பணம் கொள்ளை போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதே போல் அந்தியூர் அருகே உள்ள நகலூர் பெருமாள்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையிலும் ரூ. 7000 பணம் திருட்டுப் போய் உள்ளது. இதேபோல் மங்கலம் பள்ளி பகுதியில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடையிலும் பணம் திருடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சனிக்கிழமை இரவு வியாபாரம் முடிந்ததும் அந்தந்த கடை உரிமையாளர்கள் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டனர்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் நோட்டமிட்டு நள்ளிரவில் புகுந்து கடையில் பணத்தை திருடி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

    மேலும் மங்களம் பள்ளியில் ஜெராக்ஸ் கடையில் மர்ம நபர்கள் திருடும் காட்சி அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் நள்ளிரவு 2.15 மணி அளவில் மர்ம நபர்கள் வந்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பணத்தை திருடுவது பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர் பகுதிகள் இரவு நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து இரவு நேர ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×