search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்
    X

    ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

    • கடந்த இரு மாதங்களாக ஊதியம் கூட வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
    • பொதுத் துறை நிறுவனங்களிலும் குத்தகைத் தொழிலாளர் முறையை உடனடியாக ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையை அடுத்த அம்பத்தூர் பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் தொழிற்சாலையில் உற்பத்தியைப் பெருக்குவதற்காக கடந்த சில மாதங்களாக குழந்தைத் தொழிலாளர்கள் பெருமளவில் பணி அமர்த்தப்பட்டதாகவும், அவர்களுக்கு கடந்த இரு மாதங்களாக ஊதியம் கூட வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    ஆவின் பால்பண்ணையில் பல மாதங்களாக வேலை வாங்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களே தங்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆவின் பால்பண்ணை முன் நேற்று போராட்டம் நடத்தியதன் மூலம் இந்தக் குற்றச்சாட்டு உண்மை என்று உறுதியாகி உள்ளது. இந்த குற்றச்சாட்டை ஆவின் நிறுவனமும் மறுக்கவில்லை.

    ஆவின் நிறுவனத்தில் நடைபெற்ற அத்துமீறல்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் காரணம் அங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட குத்தகைத் தொழிலாளர் முறை தான். ஒரு நிறுவனத்திற்கோ, ஓர் அலுவலகத்திற்கோ குறிப்பிட்ட எண்ணிக்கையில் பணியாளர்கள் தேவைப்பட்டால், அவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் நேரடியாக நியமிக்காமல், மனிதவள நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு, அவர்களுக்கான ஊதியத்தை சம்பந்தப்பட்ட மனிதவள நிறுவனத்திற்கு வழங்குவது தான் குத்தகைத் தொழிலாளர் முறை. ஆவின் நிறுவனத்திலும் அப்படித்தான் பால்பொருட்கள் தயாரிப்புக்குத் தேவையான தொழிலாளர்களை மனிதவள நிறுவனத்திடமிருந்து ஆவின் அம்பத்தூர் பால்பண்ணை பெற்றுள்ளது.

    மனிதவள நிறுவனம் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அனுப்பிய போதும், அதைக் கூட கண்டுகொள்ளாமல் அவர்களிடமிருந்து ஆவின் நிறுவனம் வேலைவாங்கி உள்ளது.

    குழந்தை தொழிலாளர்களுக்கான ஊதியத்தை ஆவின் நிறுவனத்திடமிருந்து வாங்கிய மனிதவள நிறுவனம், அதை உழைத்த குழந்தைகளுக்கு வழங்கவும் இல்லை; அதையும் ஆவின் நிறுவனம் கண்டுகொள்ளவில்லை.

    ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதற்கு காரணமானவர்கள் யார்? என்பது கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் உடனடியாக ஊதிய நிலுவை வழங்கப்பட வேண்டும்.

    குழந்தை தொழிலாளர்களுக்கு கல்வி வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக, அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் குத்தகைத் தொழிலாளர் முறையை உடனடியாக ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×