என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எடப்பாடி கூட்டுறவு வங்கியில் ரூ.3 கோடி மோசடி- போலீசார் விசாரணை
- சங்க முன்னாள் செயலாளர் மோகன், முன்னாள் மேலாளர் மணி, கள ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
- தலைமறைவான ரவிக்குமாரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளரிவெளி கிராமத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறைக்கு சொந்தமான தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த சங்கத்தில் அப்பகுதியை சேர்ந்த மோகன் (வயது 55) என்பவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு செயலாளராக பதவி வகித்து வந்தார். அப்போது சங்கத்தில் பயிர்கடன், நகைக்கடன், நீண்ட கால இட்டு வைப்பு உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளில் சுமார் ரூ.3 கோடியே 15 லட்சம் வரை கையாடல் செய்யப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்தது.
இது தொடர்பாக கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், மோகன் மற்றும் சங்கத்தில் பணிபுரியும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சங்க செயலாளர் மோகன், மேலாளர் மணி, கள ஆய்வாளர் ஆனந்தகுமார், நகை மதிப்பீட்டாளர் ரவிக்குமார் உள்பட 4 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து இது பற்றிய விசாரணை சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்று இரவு சங்க முன்னாள் செயலாளர் மோகன், முன்னாள் மேலாளர் மணி, கள ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து நகை மதிப்பீட்டாளர் ரவிக்குமாரை கைது செய்வதற்காக உயர் போலீஸ் அதிகாரி தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவினர் நள்ளிரவு 1.40 மணி அளவில் கள்ளப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர் வீட்டில் இல்லை. போலீசார் வருவதை அறிந்து முன்கூட்டியே தலைமறைவாகி விட்டார்.
இதையடுத்து கைதான மோகன், மணி, ஆனந்தகுமார் ஆகிய 3 பேரையும் போலீசார், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைமறைவான ரவிக்குமாரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.






